
நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் நடுங்கும் கோரமான இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணில் புதைந்தனர். கண்ணெதிரிலேயே உறவுகளையும் உடமைகளையும் இழந்து மரணத்தின் விளிம்பில் இருந்து நூலிழையில் உயிர் மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீளாத் துயரில் இருந்து மெள்ள மீண்டெழும் ஒருசிலர் முன்மாதிரியாக தங்களின் மறுவாழ்வைத் தொடங்கி பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர். அந்த வரிசையில், கடந்த ஆண்டு ஜூலை 30 -ம் தேதி ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரழிவில் மனைவி, குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்தவர் நௌஃபல். தன் வாழ்வை விழுங்கிய அதே ஜூலை 30 நாளின் பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இது குறித்து பகிரும் வயநாடு, மேப்பாடி இளைஞர்கள் , ” நௌஃபால் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். நிலச்சரிவில் இவரின் கிராமம் முற்றிலுமாக அழிந்து போனது. துயரம் நடந்த நாளில், நௌஃபால் ஓமனில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்டு ஊர் திரும்பினார். ஊரும் இல்லை உறவுகளும் இல்லை. பெற்றோர் முதல் மனைவி குழந்தைகள் வரை 11 பேரும் மண்ணில் புதைந்தனர். அவரின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரின் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும் நிலச்சரிவில் இறந்தனர்.

இந்த உலகில் இனி தனக்கு யாரும் இல்லை என ஏங்கி துடிதுடித்தார் ஒவ்வொரு நொடியும். அவரைத் தேற்றுவது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. கேரள நத்வதுல் முஜாஹிதீன் என்கிற இஸ்லாமிய அமைப்பு இவருக்கு உதவியாக நின்றது. மறுவாழ்வைத் தொடங்க ரூ. 7 லட்சத்தை வசூலித்துக் கொடுத்தது. மேப்பாடியில் பேக்கரி தொடங்கியிருக்கிறார். மறுமணம் செய்து புதிய வீடு ஒன்றில் புதிய வாழ்வையும் தொடங்கியிருக்கிறார்” என்றனர்
நௌஃபால் பேசுகையில், “எனக்கு யார் என்றே தெரியாத நிறைய பேர் என் வாழ்க்கையை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர உதவியிருக்கிறார்கள். உதவியாளர்களில் பெரும்பாலோரை நான் பார்த்தது கூட கிடையாது. ஆனால், அவர்களால் இது சாத்தியமானது. ஓமனில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி ஹோட்டல் நடத்த வேண்டும் என்பதுதான் என் மனைவியின் கனவாக இருந்தது. மனைவியின் கனவை மேப்பாடியில் உணவுகத்தை தொடங்கியிருக்கிறேன்.

உணவகத்திற்கு ‘ஜூலை 30’ என்று பெயரிட்டபோது, பலரும் விமர்சித்தனர். ஆனால், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் அந்த நாளையும், அது தந்த சோகத்தையும் இழப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், அது தன் மக்களை பணிவுள்ளவர்களாகவும் தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும் மாற்றும் என்கிற நம்பிக்கையில் பெயர் வைத்தேன்” என தெரிவித்துள்ளார்.