
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து ஆதார் மற்றும் அதன் ஒடிபி எண் ஆகியவற்றை பெற்று வந்தனர்.
இதற்கு எதிராக திருபுவனத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபகள் அமர்வு, `திமுக ஓடிபி பெறும் விவகாரம் தனிநபரின் பாதுகாப்பு விஷயங்களில் பிரச்னை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கும் ஓடிபி பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என்ற உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், `ஓடிபி பெறும் விஷயத்தில் பொதுமக்களிடம் எந்த வற்புறுத்தலையும் தங்கள் கட்சியினர் மேற்கொள்ளவில்லை. எதற்காக ஓடிபி பெறப்படுகின்றது அதை என்ன செய்யவிருக்கிறோம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
மேலும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் தானாகவே இந்த உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் இது எதையும் ஆராயாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே இந்த தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என திமுக அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.