
2026 தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் இன்று (ஜூலை 29) சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
`அதிமுக கூட்டணியில் சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் அதிமுக நிலைப்பாடு என்ன?’ என்ற கேள்விக்கு , “இந்த யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தலைமையிடம்தான் கேட்க வேண்டும்” என்றிருக்கிறார்.
வட மாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு குறித்து பேசியதால், தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் முடிந்து போன ஒன்று, இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, ” தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளது, பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.