
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றினார்.
தனது உரையில் அமித் ஷா, “இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே.
1971-ல், சிம்லா ஒப்பந்தத்தின் போது, காங்கிரஸ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றி மறந்துவிட்டனர்.
அப்போது அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்திருந்தால், இப்போது அங்குள்ள முகாம்களில் தாக்குதல்களை நடத்த வேண்டியிருந்திருக்காது.” என்று காங்கிரஸையும், நேருவையும் குற்றம்சாட்டினார்.
அவரைத்தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி உரையாற்றத் தொடங்கினர். அப்போது கனிமொழி, “வரலாற்றை நீங்கள் மாற்றி எழுதுகிறீர்கள். உங்களால் தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் மீண்டும் பெரியார், அம்பேத்கரைப் படிக்கிறார்கள்.
உலகெங்கிலும் இருந்து இளைஞர்கள் நேருவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
நீங்கள் என்ன தவறு செய்தாலும் அதற்கு காரணம் நேரு என்கிறீர்கள். அதனால், மாணவர்கள் அவரைப் பற்றி தெரிந்துள்ள விரும்புகிறார்கள்.
நம்முடைய அமைதி சீர்குலைந்துவிட்டது. இந்திய மக்களை நீங்கள் தோற்கடித்துவிட்டீர்கள்.
மத்திய உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதிலேயே குறியாக இருக்கிறார்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நீங்கள் அதே இடத்தில் இருக்கப்போகிறீர்கள் என்று குறிப்பிட்டார்.
ஆனால், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள்தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள்.

ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
எல்லா தேர்தலுக்கும் முன்பு செய்வதைப்போலவே சமீபத்தில் தமிழ்நாட்டின் பெருமையையும், கலாசாரத்தையும் பிரதமர் புகழ்ந்தார்.
ஆனால், கீழடி கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் பெருமையைப் பற்றிப் பேச அவர்களுக்கு விருப்பமில்லை.
கங்கைகொண்ட சோழபுரம்… பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கங்கையை வென்றவன் அவன்.
தமிழன் கங்கையை வெல்வான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.