
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும், நேற்று (ஜூலை 28) நடைபெற்ற ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று பதில் அளித்தார். அவர் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. அப்பாவி மக்களிடம் மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்ற காட்டுமிராண்டிகளின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.