
ககன்யான் திட்டத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத சோதனை ராக்கெட்டில் ‘வியோமித்ரா’ (Vyommitra) என்ற பெண் ரோபோ பயணம் செய்கிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமான ‘ககன்யான்’ (Gaganyaan) திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு முன்பாக ‘வியோமித்ரா’ என்ற ஒரு பெண் ரோபோவை வரும் டிசம்பர் மாதம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, ஒரு சோதனை முயற்சியாக இந்த வியோமித்திரா என்ற பெண் ரோபோவை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்புகிறது.
வியோமித்ராவின் செயல்பாடுகள் என்ன?
வியோமா என்றால் விண்வெளி, மித்ரா என்றால் நண்பர் என்று அர்த்தம் இந்த இரண்டையும் சேர்ந்து வியோமித்ரா என்று இந்த ரோபோவிற்கு பெயரிட்டிருக்கின்றனர். இதுவொரு சமஸ்கிருத வார்த்தையாகும். இந்த பெண் ரோபோட் கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டுள்ள மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் ஏதேனும் எதிர்பாராத இடர்கள் ஏற்பட்டால், அதை எச்சரிக்கும்.

ராக்கெட்டை இயக்குவதற்கான கையேட்டில் உள்ள கட்டளைகளின் அடிப்படையில் விண்வெளிக்கு சென்று திரும்புவதற்கான பணியைச் செய்யும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு மையத்தில் உள்ள விஞ்ஞானிகளுடன் தனது குரலில் இந்த ரோபோ தகவல்களை பரிமாறும் வகையில் இதன் செயல்பாடு இருக்கும். இதன் மூலமாக விண்வெளியில் உள்ள சூழ்நிலைகளுக்கு விண்வெளி வீரர்கள் எப்படி தயாராக வேண்டும்? என்பதை அறிய முடியும்.
விண்வெளியில் சுவாசிப்பது, பகல்-இரவில் வேறுபடும் தன்மைகள், எதிர்பாராத நிகழ்வுகளின்போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்ற விஷயங்களை அறிய இந்த ரோபோவின் விண்வெளி பயணம் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
அதேபோல், ராக்கெட்டின் எரிவாயு, மின்சாரம், உயிர் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளையும் இந்த பயணத்தின் போது கண்காணித்து விஞ்ஞானிகளுக்கு தகவல்களை இந்த ரோபோ பரிமாற்றம் செய்யும்.

இந்த தரவுகள், ககன்யான் திட்டத்தின் மூலமாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும்போது பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், மனித உருவ ரோபோவை விண்வெளிக்கு அனுப்பிய 4- வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.