
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் ‘கிராண்ட் முஃப்தி’ என அழைக்கப்படும் காந்தபுரம் ஏபி அபூபக்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா. குடும்பத்தின் பொருளாதாரம் காரணமாக ஏமன் சென்ற இவர், முதலில் அங்கு நர்ஸாக பணிபுரிந்துள்ளார்.
பின்னர், உள்நாட்டை சேர்ந்த தொழிலதிபர் தலால் அப்து மஹ்தியை பார்ட்னராக கொண்டு ஏமனில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
நாள் ஆக ஆக, தலால் அப்து மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்த, நிமிஷா மஹ்தியைக் கொலை செய்திருக்கிறார்.
இந்த வழக்கின் டைம்லைன் இதோ…
2017: அளவுக்கு மீறி மயக்க மருந்தை தலால் அப்து மஹ்திக்கு கொடுத்ததாக நிமிஷா பிரியா மீது வழக்கு தொடரப்பட்டது.
நிமிஷா ஏமனில் இருந்து தப்பி செல்ல முயன்றப்போது, ஏமன் – சவுதி எல்லையில் கைது செய்யப்பட்டார்.
2018: ஏமன் நீதிமன்றத்தில் நிமிஷா பிரியாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
2020: ஏமன் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.
2023: நிமிஷாவின் மேல்முறையீடு மீண்டும் ஏமனின் உச்ச நீதிமன்ற கவுன்சிலில் ரத்து செய்யப்பட்டது.
ஏப்ரல் 2024: நிமிஷா பிரியாவின் குடும்பம் மஹ்தியின் குடும்பத்திடம் ‘பிளட் மணி’ குறித்து பேசியது.
ஜூலை 15, 2025: 2025-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நிமிஷா பிரியாவிற்கு வழங்கப்பட இருந்த மரண தண்டனை தள்ளிப்போடப்பட்டது.
இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தான் முக்கிய காரணம்.
தற்போது
காந்தபுரம் ஏபி அபூபக்கர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனைய ஏமன் அரசு ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது இன்னமும் முடிவாக இல்லை என்று இந்திய அரசு தரப்பில் கூறப்படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.