
ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகபட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்கக் கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதார தளமாக இருந்து வருகிறது.
அதை நம்பியே பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்காக தமிழக மீனவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.
மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 26 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கை கடற்படை.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 391 படகுகளில் மீன் துறை அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணை பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைப்படகினை சிறை பிடித்துச் சென்றனர்.
மேலும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்ற படகின் உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மோபின், சைமன், சேகர், டெனிசன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.
கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 26 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் ஒன்று கூட விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட ஒரு மீனவர் கூட விடுவிக்கப்படவில்லை.

வழக்கமாக சிறை பிடிக்கப்படும் மீனவர்களை விசாரணைக்குப் பின் உள்ளூர் போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைப்பர். நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர் படுத்திய பின் முதல் வாய்தாவின் போதே விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் பிடிபட்ட 26 மீனவர்கள் 3 வாய்தாக்கள் முடிந்தும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.