தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அதிகபட்சம் மூன்று மாதம் வரை கால வரம்பை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதற்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக இந்த தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை முன்வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் கடிதம் எழுதி இருந்தார்
இந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு தனி மனுவாக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் அங்கம் வகிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை விசாரணைக்காக அமைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரிக்க கூடாது என ஆரம்பத்திலேயே தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களின் கருத்தையும் நாங்கள் கேட்க வேண்டியிருக்கிறது எனக்கூறி மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க கடந்த வாரம் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.!
எட்டு பக்கங்களைக் கொண்ட அந்த பதில் மனுவில், “மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அனைத்து சட்ட விதிகளையும் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கும் அந்த தீர்ப்பிலேயே பதில் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக அரசியல் சாசன அமர்வு விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. எனவே குடியரசுத் தலைவரின் கடிதத்தை அவருக்கு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.

நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல!
உச்ச நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் முடிவெடுத்து தீர்ப்பு வழங்கியதற்கு, பிறகு அதில் சந்தேகம் இருக்கிறது என யாரும் கேட்க முடியாது. அதில் நடைமுறை சாத்தியம் இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு எதையும் தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசும் இதனை ஏற்றுக் கொண்டது என்று தான் பொருள். எனவே குடியரசுத் தலைவரின் கடிதத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தை மீண்டும் முழு மறு விசாரணைக்கு உட்படுத்துவது என்பது நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல.
நேரடியாக இந்த விவகாரத்தில் மனுதாக்கல் செய்யாத மத்திய அரசு, குடியரசுத் தலைவர் கடிதத்தின் மூலம் மாறுவேடம் அணிந்து கொண்டு உச்ச நீதிமன்றத்தில் குறுக்கு வழியில் விசாரணையை நடத்த திட்டமிட்டு இருக்கிறது” என விமர்சித்துள்ள தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத்திற்கு என்றே இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கப்பட்டது. அதை மறுபரிசீலனை செய்ய எந்த அவசியமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.