
நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் உடன் அமைதியை ஏற்படுத்தியதில் ட்ரம்ப்பின் பங்கு இல்லை எனக் பேசினார்.
ஜெய்சங்கரின் பேச்சில் எதிர்க்கட்சிகள் குறுக்கிட்டு விமர்சித்தபோது பொறுமையிழந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் பதவியில் இருப்பீர்கள்” என வெளியுறவுத்துறை அமைச்சரை நோக்கி கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கையில்லை…
பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற ஏப்ரல் 22 முதல் மே 17 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை எனப் பேசினார். அதற்கு எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே குறுக்கிட்ட அமித் ஷா, “அவர்களுக்கு (எதிர்க்கட்சியினர்) இந்திய நாட்டின் சொந்த வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் வேறொரு நாட்டின் மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.
அவர்களின் கட்சியில் வெளிநாட்டினரின் முக்கியத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக அவர்களின் அனைத்து விஷயங்களையும் நாடாளுமன்றத்தில் புகுத்த வேண்டுமென்ற அவசியமில்லை.

இதற்காகத்தான் அவர்கள் அங்கே (எதிர்க்கட்சி இருக்கையில்) அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்… நீங்கள் (ஜெய்சங்கர்) இன்னும் 20 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.” எனப் பேசினார்.
அமெரிக்கா – இந்தியா இடையே நடந்த பேச்சுவார்த்தை என்ன?
தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்காவின் அனைத்து கூற்றுகளையும் நிராகரித்தார். மேலும் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமரை அழைத்து பாகிஸ்தான் தரப்பில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தார் என்றும் அதற்கு பிரதமர் மோடி, இந்தியா அதைவிட பலமாக பதிலடி கொடுக்கும் என பதிலளித்ததாகவும் கூறினார்.
மேலும் மே 9,10 தேதிகளில் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாகத் தெரிவித்தார்.
அத்துடன் ஜெய்சங்கர் கூறியதன்படி, மே 10-ம் தேதி பல நாடுகள் இந்திய அரசை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. அந்த நாடுகளிடம் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) மூலமாக போர் நிறுத்தம் குறித்து பேசினால் மட்டுமே பதிலளிக்கப்படும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை ஜெய்சங்கர் பேசும்போது எதிர்க்கட்சியினர் மீண்டும் கூச்சல் எழுப்பினர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது இடையூறு செய்வது…
மீண்டும் குறுக்கிட்ட அமித் ஷா, “அவர்களின் தலைவர்கள் பேசும்போது நாங்கள் பொறுமையாக கேட்டோம்” என்று சபாநாயகரிடம் கூறினார். அத்துடன், “நாளை, அவர்கள் எத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நான் பட்டியலிடுவேன். இப்போது, அவர்களால் உண்மையைத் தாங்க முடியவில்லை. இவ்வளவு முக்கியமான பிரச்னை விவாதிக்கப்படும்போது, வெளியுறவு அமைச்சர் பேசும்போது, இப்படியான இடையூறுகள் நியாயமானதா? சபாநாயகர் அவர்களே, இப்போது அவர்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும்—இல்லையெனில், பின்னர் எங்கள் உறுப்பினர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியாது.” என்றார்.