• July 29, 2025
  • NewsEditor
  • 0

“இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

பிரதமர் மோடி

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டிப்பதாக் கூறி மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா பேசும்போது, “திமுக அரசு இந்து மக்களுக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிராக செயல்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்காத காரணத்தினால் மதுரை ஆதீனத்திற்கு தொடர்ந்து இந்த அரசு மிரட்டல் விடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இந்து விரோத திமுக-வில் இந்துக்கள் இருக்கக்கூடாது. பிரதமர் மோடி தமிழகம் வந்ததால் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்து விட்டது. அவர் டெல்லி சென்றவுடன், காய்ச்சல் குறைந்து விட்டது. திமுக அரசு, மோடியை பார்த்து பயந்துள்ளது.

மதுரையில் ஒழுக்கமாக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி இருக்கிறோம். ஆனால், திமுக-வினரால் அதுபோன்று ஒரு மாநாட்டை நடத்த முடியாது. இந்து சமுதாயத்தை எப்படியொல்லாம் கொடுமைப்படுத்தலாம் என திமுக நினைத்து கொண்டிருக்கிறது. அதற்காக காவல்துறையை கையில் எடுத்துள்ளனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு
மதுரை முருக பக்தர்கள் மாநாடு

திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற கோயில் ஊழியரை காவல்துறை அடித்துக் கொலை செய்துள்ளது. இன்னொரு பக்கம் நேர்மையாக பணியாற்றியடி. எஸ்.பி-யை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுபோன்று நேர்மையாக இருப்பவர்களுக்கும், இந்துக்களுக்கும் எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. எனவே, ஒரு இந்து கூட திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது, அவர்களை தேர்தல் மூலம் தூக்கி எறிய வேண்டும்.

பாதிரியார் மோகன் லாசரஸ் இந்து கோயில்கள் சாத்தான்களின் கூடாரம் என விமர்சித்தார். அவர் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததா?

டாஸ்மாக் ஊழல் விவகாரம் அமலாக்கத்துறை பிடியில் உள்ளதால் அதிர்ந்து போய் என்ன செய்வது என தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் நடுக்கத்தில் உள்ளார். அதை மறைப்பதற்காகவே இந்துக்கள் மீதும் இந்து மடாதிபதிகள் மீதும் தாக்குதலை நடத்தத் தொடங்கி உள்ளார்.

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்த அரசு அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையும் தாண்டி முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. இதை திமுக அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி அளித்த நீதித்துறை மீது கோபத்தில் உள்ளது, அரசின் இச்செயல் அவர்களுக்கு எதிராகவே திரும்பும்.

ஹெச்.ராஜா

2023 ஜனவரியில் ராமஜென்ம பூமி பிரதிஷ்டை நடந்தபோது தமிழகத்தில் எந்த கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தக்கூடாது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக்கூடாது என இந்த அரசு உத்தரவிட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்துக்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்தே தவிர, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என முதலில் கேட்டது பாஜகதான், இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *