• July 29, 2025
  • NewsEditor
  • 0

சுமார் ஐந்தாண்டுகள் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகஸ்ட் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஒளிபரப்பான தொடர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தச் சூழலில் இந்தச் சீரியலுக்கு வசனம் எழுதிய ப்ரியா தம்பியிடம் பேசினோம்.

பிரியா தம்பி,

‘’வங்காள மொழியில் வெளியான ஒரு தொடரின் தழுவல்தான் கதை. ஆனா அந்த வங்க வெர்சனைப் பார்த்துட்டு சில விஷயங்களை மட்டும் குறிப்பா ஆரம்ப சில எபிசோடுகளை மட்டும் பிடிச்சுகிட்டு பிறகு தமிழ்த் தொலைக்காட்சி சூழலுக்கு ஏத்தபடி கதையை நகர்த்தினோம்.

ஒன் லைன்னு சொன்னா புறக்கணிக்கப்படுகிற ஒரு மனைவிதாங்க. குடும்பம், புருஷன் பிள்ளைகள்னு வட்டத்தைப் போட்டு வாழற மனைவி புருஷனே தன்னை ஒரு பொருட்டா நினைக்கிறதில்லை. பொட்டிலடிச்ச மாதிரி தெரியறப்ப என்ன செய்யறானு கொண்டு போனப்ப இங்க ஏகப்பட்ட பெண்கள் சீரியலோட கனெக்ட் ஆகிட்டாங்க.

ஏன்னா, அப்படி பெண்கள் நிறைய நம் சமூகத்துல வாழ்ந்திட்டுருக்காங்க. என்னுடன் ரயில்ல பயணிச்ச ஒரு பெண் தன் போலீஸ்கார கணவன் சக பெண் போலீசுடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லி அழுத சம்பவங்களையெல்லாம் எதிர்கொண்டேன்.

பாக்கியலட்சுமி
Baakiyalakshmi serial

அதேநேரம் சீரியல்னாலே காலம் காலமா இருந்துட்டு வர்ற டெம்ப்ளேட்டான கொடூரமான மாமியார் அவங்களைக் கொலை செய்யத் துடிக்கிற மருமகள்னு கதையைக் கொண்டு போகக்கூடாதுங்கிறதுல நாங்க தெளிவா இருந்தோம். பழைய ரூட்டை மாத்தி வித்தியாசமா ஒரு பாதை வகுத்தா மக்கள் வரவேற்பு கொடுப்பாங்கனு நினைக்கிற சேனலும் தயாரிப்புத் தரப்பும் ஒரு எழுத்தாளரா இந்த விஷயத்துல எனக்கு நிறையவே சுதந்திரம் தந்திருந்தாங்க. அதனாலதான் பாக்யா அவங்க மருமகள்கள், மாமியார்னு எல்லாருமே எரிச்சல் உண்டாக்குகிறவர்களா இல்லாம இருந்தாங்க.

தவிர எனக்குமே பெண்ணுக்குப் பெண்ணே எதிரிங்கிற அரதப் பழசான டயலாக்ல எல்லாம் எனக்கு உடன்பாடில்லை.

இந்தச் சீரியலின் கேரக்டரான கோபியே மனைவியைத் தாண்டி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைக்கிற இடத்துல நம்ம பாட்டி ஏன் நம்ம அம்மாக்கள் ஜெனரேஷனே சொல்ற டயலாக் இதுதான்.

பாக்கியலட்சுமி ஜெனி / திவ்யா கணேஷ்

இதை மாத்தணும்னு நினைச்சேன். கோபிங்கிற ஒரு ஆண் தப்பு செய்யறப்ப அந்தப் பெண் மீதும் தப்பு இருந்தாக் கூட முழுப் பலியும் ஏன் அவள் மீது மட்டுமே விழணும்கிறதுதான் என் கேள்வி. இதனாலேயே அந்தக் கேரக்டரைக் கூட வில்லியா நாங்க சித்தரிக்கலை’’ என்றவரிடம்

பெரும்பாலான ஆண்களுமே இந்தச் சீரியலை ரசித்தார்களே, அவர்கள் எப்படி தொடருக்குள் இழுக்கப் பட்டார்கள் என்ற கேள்வியை வைத்தோம்.

‘’அதைக் கேட்டப்ப எனக்கே கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கா இருந்தது. அதாவது கோபி கேரக்டருக்காகவே இந்தச் சீரியலைப் பார்த்த மாதிரிதான் தெரிய வந்திச்சு. அதுக்காக சீரியலைப் பார்த்த அத்தனை ஆண்களையும் ,மனைவி தாண்டிய தொடர்பு வச்சிருக்கிறவங்கனு சொல்ல மாட்டேன். ஆனா ’ஒரு ஆம்பளை அப்படி இப்படிதான் இருப்பான்’ங்கிற கண்ணோட்டத்துடன் கோபிக்கு ஆதரவு தருகிற ஒரு மன நிலையுடன் அடுத்து அவருக்கு என்ன நடக்குமோங்கிற ஒரு ஆவல்லயே தொடரைப் பார்த்திருக்காங்க” என்கிறார்.

`பாக்கியலட்சுமி’ சதீஷ்

தொடரின் கிளைமேக்ஸ் குறித்துக் கேட்டோம்.

‘’முதல்லயே சொன்னேன்ல மக்கள் இந்தக் கதையுடன் கனெக்ட் ஆனாங்கன்னு. அதே கனெக்டிவிடி கடைசி வரை தொடருது” என்றவர், தனக்கு இந்தத் தொடர் தந்த எனர்ஜிடிகான அனுபவமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்..

கொஞ்ச நாள் முன்னாடி என் வீட்டுக்கு ஒரு பெண் ஸ்விக்கில டெலிவரி பண்ண வந்தாங்க. அந்த நேரம் பாக்கியலட்சுமி ஓட்டிருந்தது. சீரியலைப் பார்த்துட்டு, ‘இந்தச் சீரியலைப் பார்த்துட்டுதான்மா நானும் இந்த வேலைக்கே வந்தேன். கையில நமக்குனு நாலு காசு பார்க்கணும்’னு சொன்னாங்க. அவங்ககிட்ட நான் என்னை அடையாளப்படுத்திக்கல.

எழுத்தாளர் ப்ரியா தம்பி
எழுத்தாளர் ப்ரியா தம்பி

அந்தப் பொண்ணு மாதிரி எனக்குத் தெரிய ஒரு இருபது பேருக்கு மேலயாச்சும் இந்தச் சீரியலைப் பார்த்து சுய தொழில் தொடங்க கிளம்பிருக்காங்க. எனக்கே கைப்பட லெட்டர் எழுதி தெரியப்படுத்திருக்காங்க. சேனல் எடுத்த ஒரு சர்வேலயும் இந்த விபரம் இருக்கு.

பொதுவாகவே சீரியல்னா ஒரு இளக்காரம் இருக்கிற நம்மூர் சூழல்ல இது எவ்வளவு பெரிய சாதனை. இந்தச் சாதனையில எனக்கும் பங்கிருக்குனு நினைக்கிறப்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *