
சென்னை: மத்திய அரசு மீது பழிபோடாமல் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலையெழுத்தை, பிரதமரின் வருகை நிச்சயமாக மாற்றும். பிரதமரின் வருகைக்கு பிறகு நிறைய சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
பிரதமரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தாரா என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் வறட்சி தொடங்கி விட்டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்த வேண்டும். விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.