
இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை பேசி வந்ததற்கு, நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் வர்த்த ஒப்பந்தம் பற்றி எச்சரிக்கை விடுத்து மோதலைக் கைவிட அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். தான் சண்டையை நிறுத்தாவிடில் அணு ஆயுத போராகக் கூட மாறியிருக்கும் அதனால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமென்று கூட பேசியிருந்தார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அணியின் துணைத்தலைவர் கௌரவ் கோகோய், ட்ரம்ப் இதுவரை 26 முறை இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகப் பேசியிருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் அனைத்து கூற்றுகளையும் மறுத்த வெளியுறவுத்துறை அமைச்சர், “பஹல்காம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22 முதல் மே 17 வரை (மோதல் நிறுத்தம்) பிரதமர் நரேந்திர மோடிக்கும் ட்ரம்பிற்கும் இடையே எந்த அழைப்பும் இல்லை… மேலும் எந்த கட்டத்திலும் வர்த்தகத்திற்கும் நடப்பதற்கும் (ஆபரேஷன் சிந்தூர்) இடையே எந்த தொடர்பும் இல்லை…” எனப் பேசியுள்ளார்.
மேலும் ஜூன் நடுப்பகுதியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் பேசியதாகவும், அப்போது நீண்டகாலமாக பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதற்கு ‘மத்தியஸ்தம்’ செய்ய ட்ரம்ப் முன்மொழிந்ததை பிரதமர் மறுத்ததாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்காவின் அனைத்து கூற்றுகளையும் நிராகரித்தார். மேலும் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமரை அழைத்து பாகிஸ்தான் தரப்பில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தார் என்றும் அதற்கு பிரதமர் மோடி, இந்தியா அதைவிட பலமாக பதிலடி கொடுக்கும் என பதிலளித்ததாகவும் கூறினார்.
அத்துடன் ஜெய்சங்கர் கூறியதன்படி, மே 10ம் தேதி பல நாடுகள் இந்திய அரசை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன. அந்த நாடுகளிடம் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) மூலமாக போர் நிறுத்தம் குறித்து பேசினால் மட்டுமே பதிலளிக்கப்படும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக இந்தியா-அமெரிக்கா இடையேயான தொடர்பு, அமெரிக்க வெளியுறவு செயலளர் மார்கோ ரூபியோ ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியதுதான்.
அதற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்தியாவைத் தொடர்பு கொண்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த விவகாரங்களை விவரிக்கும்போது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்தனர். சில முறை உள்துறை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசினார்.