
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷாவும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் உள்ள ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். காலை 11 மணியளவில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜபர்வான், மகாதேவ் முகடுகளுக்கு இடையே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இதற்கு ‘ஆபரேஷன் மகாதேவ்' என பெயரிடப்பட்டது.