
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்குச் செல்ல மக்களவையும் ஒத்திவைக்கப்பட்ட கொண்டே இருந்தது.
இந்த நிலையில்தான் இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் நடத்த பட்டியலிடப்பட்டது.
இருப்பினும், இன்று காலையில் கூட்டம் தொடங்கியதும் பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விவாதத்துக்கு ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தினார்.
அவரைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மீது உரையாற்றத் தொடங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றியும், பாகிஸ்தானை விமர்சித்தும் பேசினார்.

ஆனால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு அடிப்படை காரணமான பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எப்படி நடந்தது?
தீவிரவாதிகள் எப்படி இந்தியாவுக்குள் ஊடுருவினர், தீவிரவாதிகள் பிடிப்பட்டனரா? என்பது பற்றி எந்த விளக்கமும் தரவில்லை.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான கௌரவ் கோகோய், ராஜ்நாத் சிங் உரைமீது தனது கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.
யாரிடம் சரணடைந்தீர்கள்?
“ராஜ்நாத் சிங் நிறைய தகவல்களை வழங்கினார். ஆனால் ஒரு பாதுகாப்பு அமைச்சராக, தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தானிலிருந்து பஹல்காமில் நுழைந்து 26 பேரைக் கொன்றனர் என்பது பற்றி ஒருபோதும் கூறவில்லை.
நாட்டு நலனுக்காக இதில் கேள்வி கேட்பது எங்களின் கடமை. மேலும், நமது போர் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதையும் ராஜ்நாத் சிங்கிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
இதைப் பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, நமது வீரர்களுக்கும் சொல்ல வேண்டும் ஏனெனில் அவர்களிடத்தில் பொய் சொல்லப்படுகிறது.

இந்த முழு நாடும், எதிர்க்கட்சியும் பிரதமர் மோடியை ஆதரித்தது. ஆனால், திடீரென மே 10-ம் தேதி மோதல் நிறுத்தப்பட்டதாகத் தெரியவந்தது.
பாகிஸ்தான் மண்டியிடத் தயாராக இருந்தால், நீங்கள் ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் யாரிடம் சரணடைந்தீர்கள் என்பதை மோடியிடமிருந்து நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
ஏனெனில், மோதலை நிறுத்துமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் கட்டாயப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 26 முறை கூறியிருக்கிறார்.
எல்லாம் இருந்தும் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியவில்லை!
பஹல்காம் தாக்குதல் நடந்து 100 நாள்கள் ஆகிறது, ஆனால் இந்த அரசால் அந்த 5 பயங்கரவாதிகளைப் பிடிக்க முடியவில்லை.
இன்று உங்களிடம் ட்ரோன்கள், பெகாசஸ், செயற்கைக்கோள்கள், CRPF, BSF, CISF படைகள் இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்பு ராஜ்நாத் சிங்கூட அங்கு சென்றார்.
இருப்பினும், இன்னும் உங்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.

தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆனது. இந்திய ராணுவம் கால்நடையாக வந்தது.
ஒரு தாயும், மகளும் இந்திய ராணுவ வீரரைப் பார்த்தபோது அழுத காட்சியை என்னால் மறக்கவே முடியாது.
பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு?
இந்தத் தீவிரவாத தாக்குதல் குறித்து நீங்கள் ஒரு வார்த்தையாவது பேசியிருக்க வேண்டும் ராஜ்நாத் சிங்.
பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்பது? இதற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்றால் அது மத்திய உள்துறை அமைச்சர்தான்.
மத்திய உள்துறை அமைச்சரும், மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் ஆளுநருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

இந்த அரசு பலவீனமாகவும், கோழைத்தனமாகவும் இருப்பதால், தங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல் மக்களை பைசரனுக்கு அழைத்துச் சென்ற டூர் ஆபரேட்டர்களே இதற்குப் பொறுப்பு என்கிறார்கள்.
சம்பவத்தின்போது மோடி சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்தார்.
ஆனால், அவர் பஹல்காமிற்குச் செல்லாமல், பீகாரில் ஒரு அரசியல் பேரணியில் உரையாற்றினார்” என்று விமர்சித்து தனது கேள்விகளை முன்வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…