• July 28, 2025
  • NewsEditor
  • 0

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் நடிகர் மன்சூர் அலி கான்.

இதுகுறித்து இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு நபர் காவல்துறையில் புகார் அளித்த உடனேயே எஃப்.ஐ.ஆர் போடுவது என்ன சட்ட ஒழுங்கு? விசாரிக்க வேண்டாமா? 5,6 வருஷம் முன்னாடி மண்ணடியில் ஒருவருக்கு 35 லட்சம் கொடுத்து ஒரு இடம் வாங்குவதாக இருந்தது.

பின்னால் இடம் வேண்டாம் எனப் பணத்தைத் திருப்பக் கேட்டபோது அவர் கொடுக்கவில்லை என்பதால் நீண்ட நாட்களாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகிறேன். ஆனால் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இப்போது எனக்குப் பணத்தேவை இருப்பதனால் அவரிடம் கேட்பதற்காகச் சென்றுள்ளான். ஆனால் என் மகனை நேரில் கூட பார்க்காமல் காவல்துறைக்கு ஃபோன் செய்துள்ளார். இதற்கு ஒரு எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள்.

அதற்குள் ஒரு பத்திரிகை என் மகனைக் கைது செய்துவிட்டனர் என வன்மம் கக்கியிருக்கிறது. இப்போதுதான் ஒரு ஆல்பத்தில் பணியாற்றி வருகிறேன், எப்போதெல்லாம் நான் முன்னேறுகிறேனோ அப்போதெல்லாம் அசிங்கப்படுத்துகின்றனர்.

மன்சூர் அலி கான்

இங்கே காவல்துறை அதிகாரியின் பெயர் விஜயகாந்த், அவர் ‘என் பெயர் விஜயகாந்த். நீங்கள் மன்சூர் அலிகான், நான் சொல்வதைக் கேட்க வேண்டும்’ என்கிறார். இன்னொருவர் பெயர் பிரபாகரன்… எல்லோரும் ஈகோவில் அந்தந்த நபர்களாகவே வாழ்கின்றனர்.

காவலர்கள் என் மீதுப் பொய் வழக்குத் தொடர்ந்து அவமானப்படுத்தி, அவர்கள் புகழடைவது வழக்கமாக இருக்கிறது. இப்போது எஃப்.ஐ.ஆர் போட்டு என்னை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதனை செய்திகளுக்கும் கொடுத்துப் புகழடையப் பார்க்கிறார்கள். மன்சூர் அலி கான் என்றால் இளக்காரமாக இருக்கிறது.

எப்போதும் என்னை வில்லன் என்கின்றனர். வில்லன் நடிகர் என்கின்றனர். ஆனால் தலைவன் தலைவியில் நான் வில்லனா, கூலியில் நான் வில்லனா? வடமாநிலத்திலிருந்து வில்லன்களைக் கொண்டுவருகின்றனர். என்னை முன்னேறவிடாமல் வில்லனாகவே வைத்திருக்கின்றனர்.

என் மகன் துக்ளக் யாரிடமோ கஞ்சா வாங்கி பயன்படுத்தியபோது அவனை அடித்து முதுகைப் பிடித்து இழுத்துட்டுப்போங்க என்றேன். ஒரு அப்பனாகச் செய்ய வேண்டியதைச் செய்தேன். ஆனால் இப்போது தவறே செய்யாதவன் மீது எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். இதைத்தானே தமிழ்நாடு முழுவதும் செய்கிறார்கள்” எனக் கண்கலங்கினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *