• July 28, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலத்தில் ஆவணி மாதம் நடைபெறும் மலையாள புத்தாண்டு விழாவுக்கு முன்னதாக ஆடி மாதத்தில் முக்கிய கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். கேரளாவில் நடைபெறும் விழாக்களில் இந்த நிறை புத்தரிசி பூஜை பிரசித்தி பெற்றது. விவசாயம் செழிப்பதற்காக நெற்கதிர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

நெற்கதிர்

முன்னதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அனுமதி வழங்கியதன் பேரில் நிறைப்புத்தரிசி பூஜைக்கான நெற்கதிர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கேரளாவில் உள்ள கோயில்களான அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, புனலூர் கிருஷ்ணன் கோயில், ஆரண்முழா பார்த்தசாரதி கோயில், பந்தளம் ஐயப்பன் கோயில், சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

இதற்காக ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் குழு மற்றும் நாகராஜ் குழுவினர் சார்பில் 120 கட்டுகள் நெற்கதிர் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்கதிர்

மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இதற்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லத்தில் இருந்தும் ஐயப்பன் சேவா சங்கத்தினர் நெற்கதிர்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *