• July 28, 2025
  • NewsEditor
  • 0

விவசாயத்தில் சாதிக்க அதிகப்படியான நிலம் தேவை என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் சிறிய அளவு நிலத்திலும் விவசாயிகள் பெரிய அளவில் சாதித்த வரலாறுகள் உண்டு.

பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் கேரட் மட்டும் விவசாயம் செய்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலம் கபூர்தர்லா மாவட்டத்தில் உள்ள பரம்ஜித்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த புமன் சிங் கெளரா இச்சாதனையை செய்து வருகிறார்.

கஷ்டப்படும் ஏழ்மை விவசாய குடும்பத்தில் பிறந்த புமன் சிங் கல்லூரியில் படித்தபோது கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது கல்லூரி படிப்பை இரண்டாவது ஆண்டில் கைவிட்டார்.

அதன் பிறகு தனது குடும்பத் தொழிலான விவசாயத்தை கையில் எடுத்தார். வழக்கமான விவசாயத்தில் நெல், கோதுமை, பால் பண்ணை போன்றவற்றில் ஈடுபட்டார். 4.5 ஏக்கரில் இந்த விவசாயத்தை தொடங்கினார்.

இதில் புமன் சிங் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்தே கேரட் விவசாயத்தில் ஈடுபட புமன் சிங் முடிவு செய்தார்.

இது குறித்து புமன் சிங் கூறுகையில், ”நான் கேரட் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தபோது அனைவரும் அனுபவம் இல்லாமல் அதில்ஈடுபடவேண்டாம் என்று கூறினர்.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் துணிந்து 4.5 ஏக்கரில் கேரட் விவசாயம் செய்தேன். கபூர்தலா மாவட்டத்தின் மற்ற பகுதியில் விவசாயிகள் அதிக அளவு கேரட் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கேரட் விவசாயத்திற்கு மணற்பாங்கான நிலம் தேவை. எங்களது கிராமத்தில் அது போன்ற நிலம் இருந்தது. எனவே கேரட் விவசாயத்தில் என்னால் சாதிக்க முடிந்தது.

கேரட் விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதற்காக வேளாண் பல்கலைக்கழகத்திற்கு பல முறை சென்று தேவையான தகவல்களை தெரிந்துகொண்டேன். அங்கு கேரட்டின் புதிய ரகங்கள் குறித்து அறிந்து கொண்டேன். கிரிஷி விக்யான் கேந்திரா நடத்திய பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டேன்.

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கேரட் விவசாயத்தை தொடங்குவோம். 90 முதல் 100 நாள்களில் கேரட் அறுவடைக்கு வருகிறது. ஆரம்பத்தில் அறுவடை செய்யப்பட்ட கேரட்டை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தது. இதனால் கேரட்டை தரமான முறையில் விளைவிக்க முடிவு செய்தேன்.

அதோடு கேரட் விளைவிக்கப்படும் இடங்களையும் படிப்படியாக அதிகரித்தேன். இப்போது சொந்தமாக 50 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறேன். இது தவிர 30 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். இதில் 50 ஏக்கரில் கேரட் பயிரிடுகிறேன்

கேரட் விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தேன். தரமான கேரட்டை விளைவித்ததால் வியாபாரிகள் என்னிடம் நேரடியாக வந்து கேரட்டை வாங்கிச்செல்கின்றனர்.

கேரட் சாகுபடியில் கோடிகளை குவிக்கும் பூமன்சிங்

இதனால் நாளுக்கு நாள் லாபம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கேரட் விவசாயத்திற்கு தேவையான விதைகளை வெளியில் இருந்து வாங்கினேன். ஆனால் நாளடைவில் எனக்கு தேவையான விதைகளை நானே விளைவித்தேன். அதோடு தேவைக்கு அதிகமான விதைகளை வெளியில் விற்பனை செய்தேன். அதிலும் இப்போது லாபம் கிடைக்கிறது. கேரட் மற்றும் கேரட் விதைகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் கேரட் விவசாயத்தை எள்ளி நகையாடிய கிராம மக்கள் இப்போது புமன் சிங் வளர்ச்சியை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இப்போது கேரட் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *