
பீகாரில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி’ நடந்தது. அதில் தேர்தல் ஆணையம், 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், இந்த ஆவணங்களில் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது.
இந்த உத்தரவின் மூலம், தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பிரிக்க பார்க்கிறது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன. வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
எதிர்க்கட்சி வாதம்
தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான ராகேஷ் திவேதி, “ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. அதனால், அவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்றுகொள்ள முடியாது.
ஆதார் கார்டு ஒத்துகொள்ளப்படுகிறது. ஆனால், அத்துடன் இன்னொரு ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
நீதிபதிகளின் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, “எஸ்.ஐ.ஆர் அறிக்கையின் படி, எந்தவொரு ஆவணங்கள் மூலமும் முடிவுக்கு வர முடியாது என்று கூறுகிறீர்கள்.
நாளை, ஆதாரில் மட்டுமல்ல, குறிப்பிடப்பட்டிருக்கும் 11 ஆவணங்களிலும் நீங்கள் மோசடிகளை கண்டுபிடிக்கலாம். அது தனி பிரச்னை.
நாம் இப்போது பெரிய அளவிலான மக்களை தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலக்கி வருகிறோம். ஆனால், அதற்கு பதில், நாம் அதிக அளவிலான மக்களை இதில் உள்ளே கொண்டு வர வேண்டும்.
அதனால், ஆதாரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டனர்.

மனுதாரரின் வழக்கறிஞர்…
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தேர்தல் ஆணையம் செய்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
“அது முடியாது. ஆனால் எதாவது தவறாக நடந்தால், நாங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிடுவோம்” என்று நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.
இன்னும் இந்த வழக்கு முழுவதுமாக முடியவில்லை. இன்று நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி உடன் சந்திப்பு இருப்பதால், அடுத்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.