
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றிருந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
ஆனால், இந்தப் போட்டி நான்காவது நாள் வரைக்குமே இங்கிலாந்தின் கையில்தான் இருந்தது. ஆனால், இந்திய பேட்டர்கள் இரண்டாவது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடி ஐந்தாவது நாள் கடைசி வரை போட்டியை இழுத்து டிரா செய்தனர். இரண்டாவது இன்னிங்ஸின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, நாள் முடிவடைய இன்னும் 14 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியைக் கைக்குலுக்கி டிரா செய்து முடித்துக்கொள்ளலாம் என்று கேட்டார். ஆனால், அப்போது ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதத்தை நெருங்கி இருந்தனர்.
இதனால், போட்டியை டிரா செய்ய ஜடேஜா மறுத்துவிட்டார். மைதானத்தில் பென் ஸ்டாக்கிற்கும், ஜடேஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் இந்திய வீரர்களைப் பார்த்து கோபமாகப் பேசத் தொடங்கினர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அஷ்வின் பேசியிருக்கிறார்.
“இது என்ன இரட்டை வேடம்? உங்களுக்கு ஜெயிக்க முடியவில்லை என்ற விரக்தியில் இருக்கிறீர்கள். அதற்காக எங்கள் வீரர்கள் ஏன் சதம் அடிக்கக் கூடாது? ‘நான் கடுப்பாக இருக்கிறேன், அதனால் நீயும் சந்தோஷமாக இருக்கக் கூடாது, நீயும் அழுதுகொண்டே போ’ என்று சொல்வது போல் இருக்கிறது .
இது எப்படி நியாயம்?. காலை முதல் கஷ்டப்பட்டு விளையாடி, சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு வீரர் ஏன் விட வேண்டும்? ‘சாதாரண பந்துவீச்சாளருக்கு எதிராக சதம் அடிப்பது ஒரு பெரிய விஷயமா?’ என்று கேட்கிறார்கள்.

பந்து வீசுவது உங்கள் அணியினர். யார் பந்து வீசினாலும், சதம் அடிப்பது ஒரு வீரரின் உழைப்பு. அதை ஏன் தடுக்க வேண்டும்? முக்கிய பவுலர்களை பந்து வீச வைக்காமல் மற்றவர்களை வீசவைத்து விட்டு அவர்கள் பந்தில் செஞ்சுரி அடிக்க வேண்டுமா? என பென் ஸ்டோக்ஸ் கேட்கிறார். அது எங்கள் பிரச்னை அல்ல” என்று அஷ்வின் காட்டமாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…