
புதுடெல்லி: சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் குறித்து, அகில இந்திய இமாம்கள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா சஜித் ரஷிதியின் ஆபாச பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்பிக்கள் மவுலானா சஜித் ரஷிதியின் பேச்சுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், ஆண் எம்பிக்களும் ஏராளமான பெண் எம்பிக்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவை எம்பி தர்மஷிலா குப்தா, “இது டிம்பிள் யாதவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமானம். சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அமைதியாக இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அகிலேஷ் யாதவின் மனைவி அவமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரே அமைதியாக இருக்கிறார். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நீங்கள் நிற்க முடியாவிட்டால், நீங்கள் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். மவுலானா அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.