• July 28, 2025
  • NewsEditor
  • 0

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆறுகளில் விழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டிய மூன்று பேர் கால்வாயில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது போன்று மற்றொரு கார் உடைந்திருந்த மேம்பாலத்தில் ஏறி, ஆற்றுக்குள் விழுந்தது. இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது. மும்பையிலும் இப்போது அப்படி ஒரு சம்பவம் நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ரஞ்சனா என்ற பெண் அதிகாலை நேரத்தில் பேலாப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே கார் ஓட்டினார்.

கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றின் வழியாக பாதையை காட்டியது. அப்பெண்ணும் மேப்பை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தார்.

கார் ஒரு மேம்பாலத்தில் ஏறிச்சென்றது. அந்த மேம்பாலத்தில் கார் சென்ற போது அது அங்குள்ள கடல் கழிமுகப்பகுதியில் போய் முடிந்தது. ஆனால் வேகமாக சென்று கொண்டிருந்ததால் அவரால் கார் கடலுக்குள் விழுவதை நிறுத்த முடியவில்லை.

கார் கடலுக்குள் விழுந்தவுடன் காரில் இருந்த பெண் உதவி கேட்டு கத்தினார். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

கடலில் இருந்து மீட்கப்படும் கார்

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பெண் ஓட்டிய காரை கிரேன் மூலம் கடலில் இருந்து வெளியில் எடுத்தனர். அப்பெண்ணின் கார் விழுந்த இடத்தில் படகுகள் வந்து செல்ல சிறிய துறைமுகம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு கார் கடலுக்குள் விழுந்துவிட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து கூகுள் மேப்பை பார்த்து வாகனங்களை ஓட்டுபவர்கள் மிகவும் கவனத்துடன் ஓட்டும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் கேரளாவில் வயதான தம்பதி கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்சென்றபோது அக்கார் கால்வாயில் சென்று விழுந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *