• July 28, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி, பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

ஆண்டாள் தேரோட்டம்

இந்த ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 24ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது. மேலும் திருவிழா நடைபெறும் எட்டு நாட்களும் ஆண்டாளும், ரங்க மன்னாரும் பதினாறு சக்கர சப்பரம், ஐந்து வருட சேவை, தங்க பல்லக்கு, சேஷவாகனம், பெரிய அன்ன வாகனம், சிம்ம வாகனம், கண்ணாடி சப்பரம், பூ பல்லாக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த ஆடிப்பூர விழாவின் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேரை ஆண்டாளும், ரங்க மன்னாரும் நகர்வலம் வருவதற்காக பெரியாழ்வார் கொடுத்தது. முன்னதாக, இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதுரை கள்ளழகர் சூடிக்கழைத்த வஸ்திரத்தை உடுத்தி தேரில் எழுந்தருளினர்.

தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர்கள்

பின் இன்று நடைபெற்ற தேரோட்டதை நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இந்த ஆடிப்பூர தேர்த்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நான்கு மாட வீதிகளிலும் தேரை “கோவிந்தா கோபாலா” கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்த பின் தேரின் மீது ஏறி சாமி தரிசனமும் செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *