
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி உத்தவ் தாக்கரே தனது பிறந்தநாளினை கொண்டாடினார். உத்தவ் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி ராஜ் தாக்கரே மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அவர் உத்தவ் தாக்கரேயிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து பால்தாக்கரே புகைப்படத்திற்கு முன்பு நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.
ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம்!
இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “நாங்கள் ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்”என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரேயுடன் அவரது கட்சி நிர்வாகிகள் பாலாநந்த்காவ்கர், நிதின் சர்தேசாய் ஆகியோரும் வந்திருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயை எதிர்த்து நிதின் சர்தேசாய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் தாக்கரே கடைசியாக 2012-ம் ஆண்டு பால் தாக்கரே இறந்தபோது மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அதன் பிறகு ஒருபோதும் ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வரவில்லை. ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடனான அதிகாரப்போட்டி காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒரு போதும் சந்தித்துக்கொண்டதில்லை. தற்போது இந்தி திணிப்பு பிரச்னை வந்த போது உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
இதையடுத்து மாநில அரசு இந்தி திணிப்பை கைவிட்ட போது ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். இதையடுத்து அடுத்து நடக்க இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனாவும் கூட்டணி அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை கூட்டணி குறித்து பேசாத உத்தவ் தாக்கரே முதல் முறையாக ராஜ் தாக்கரேயுடன் இணைந்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.