• July 27, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் நேரம் என்பதால் விண்ணப்பித்த அனைவரது வங்கிக்கணக்கிலும் ரூ.1500 வரவு வைக்கப்பட்டது. இதனால் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இத்திட்டத்தில் சேர பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தது. அரசு ஊழியர்கள், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம், வருமான வரி செலுத்துபவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது என்று அரசு அறிவித்தது. ஆனால் தேர்தல் நெருங்கியதால் விண்ணப்பங்களை ஆய்வு செய்யாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1500 வரவுவைக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியில்லாதவர்கள் பெயர்களை இத்திட்டத்தில் இருந்து நீக்கி வருகிறது.

அஜித் பவார்

அதோடு புதிதாக இத்திட்டதிற்கு விண்ணப்பிக்கவும் அரசு தடைவிதித்துள்ளது. லட்கி பெஹின் திட்டத்தால் மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதனால் வருமானத்தை அதிகரிக்க மதுபானங்களின் விலையை மாநில அரசு கடுமையாக அதிகரித்துள்ளது. அதோடு புதிய மதுபானக்கடைகளுக்கு லைசென்ஸ் கொடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தில் சட்டவிரோதமாக 14 ஆயிரம் ஆண்களும் பணம் பெற்று வருவது தெரிய வந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இத்திட்டம் குறித்து தனிக்கை செய்தது. இதில் கடந்த 10 மாதத்தில் 14000 ஆண்களுக்கு 21.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில்,”லட்கி பெஹின் திட்டம் ஏழைப் பெண்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப்பட்டது. ஆண்கள் அதன் பயனாளிகளாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை நாங்கள் திரும்பப் பெறுவோம். அவர்கள் பணத்தை கொடுக்கவில்லையெனில் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே,”இந்த ஆண்கள் படிவங்களை எவ்வாறு நிரப்பினார்கள்? அவர்களுக்கு யார் உதவினார்கள்? எந்த நிறுவனத்திற்கு பதிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இதற்குப் பின்னால் பெரிய சதி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை ஒரு சிறப்பு விசாரணைக் குழு அல்லது அமலாக்கப் பிரிவு விசாரிக்க வேண்டும்,” என்று கூறினார்.

ஆன்லைனில் மோசடி செய்து ஆண்கள் தங்களை பெண்களாக பதிவு செய்துள்ளனர். தகுதியில்லாதவர்களுக்கு இத்திட்டத்தில் பணம் கொடுப்பதால் முதல் வருடத்தில் அரசுக்கு ரூ.1640 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிக பட்சம் 2 பேர் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க் முடியும். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட 7.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் அரசுக்கு ரூ.1196 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர வயது உச்ச வரம்பு 65 வயதாகும். ஆனால் 65 வயதை கடந்த 2.87 லட்சம் பேர் இத்திட்டத்தில் பணம் வாங்கி வருகின்றனர்.

இதேபோன்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் 1.62 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் 26.34 லட்சம் பேர் சட்டவிரோதமாக பயணடைந்து வருவது தெரிய வந்துள்ளது. சிலர் இத்திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பணம் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் தற்போது 2.25 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *