• July 27, 2025
  • NewsEditor
  • 0

ரூ.450 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், விமான நிலையத்தில் உள்ள புதிய முனையக் கட்டடத்தின் உள்ளே நடந்து சென்று பார்வையிட்டார். 17,340 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையம், நெரிசல் மிக்க உச்சபட்ச நேரங்களில் 1,350 பயணிகளையும், ஆண்டுதோறும் 20 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்  உச்சபட்ச நேரத்தில் 1,800 பயணிகளையும், ஆண்டிற்கு  25 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். 100 சதவிகிதம் எல்இடி விளக்குகள், மின்சேமிப்புத் திறன் கொண்ட மின் மேலாண்மை அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மறுபயன்பாடு ஆகியவற்றுடன், இந்த முனையம் கிரிஹா -4 (GRIHA-4) நிலைத்தன்மை மதிப்பீட்டை அடையும் நோக்கில் கட்டப்பட்டுள்ளது. தமிழக பாரம்பர்ய உடையான வேஷ்டி, சட்டையில் மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.

திறந்து வைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்

பின்னர் விழா மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இதுதான் வெற்றித் திருநாள். நான்கு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த வளர்ச்சி, இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கையையும், நாட்டின் புதுப்பிக்கப்பட்ட பொறுப்புணர்வையும் குறிக்கிறது. இந்த நம்பிக்கை வளர்ந்த இந்தியாவையும் வளர்ந்த தமிழ்நாட்டையும் உருவாக்க ஊக்குவிக்கும். தமிழகத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு உயர்த்துவதற்காக 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணியை தூத்துக்குடி தொடர்ந்து கண்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி 2024-ல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளிப்புற துறைமுக கொள்கலன் முனையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. செப்டம்பர் 2024-ல், தூத்துக்குடியில் புதிய சர்வதேச கொள்கலன் முனையம் திறக்கப்பட்டது. இன்று மீண்டும் ஒருமுறை, தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே மற்றும் முக்கியமான மின்சாரத் துறை முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பரவியுள்ளன. உள்கட்டமைப்பும், எரிசக்தியும் எந்த ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாகும். கடந்த 11 ஆண்டுகளில், இந்தத் துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் எவ்வளவு முன்னுரிமை அளிக்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது.

பிரதமர் மோடி

இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள், தூத்துக்குடியையும் தமிழ்நாட்டையும் மேம்பட்ட இணைப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகளின் மையங்களாக மாற்றும். வளமான மற்றும் வலுவான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில், இந்தப் பகுதியின் நீடித்த பங்களிப்பு முக்கியமானது. காலனித்துவ காலத்தில் கடல்சார் வர்த்தகத்தின் திறனை முன்னறிவித்து, உள்நாட்டு கப்பல் போக்குவரத்து முயற்சிகளைத் தொடங்கியதன் மூலம் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சவால் விடுத்த தொலைநோக்குப் பார்வை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையை பாராட்ட வேண்டும்.

தைரியத்திலும், தேசபக்தியிலும் வேரூன்றி, சுதந்திரம் மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியா குறித்து கனவு கண்டதற்காக வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அழகு முத்துக்கோன் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் பிறந்த மண் இது. வளர்ந்த தமிழ்நாடு மற்றும் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா தனது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் மெருகேற்றி வருகிறது. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நாட்டின் பயணத்தைத் துரிதப்படுத்தும்.

தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் விற்கப்படும் இந்தியப் பொருட்களில் 99 சதவிகித பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இங்கிலாந்தில் இந்தியப் பொருட்கள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால், தேவை அதிகரிக்கும், இந்தியாவில் அதிக உற்பத்தி வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கும். இந்திய-இங்கிலாந்து  தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், தமிழ்நாட்டின் இளைஞர்கள், சிறு தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இந்த ஒப்பந்தம் தொழில், மீன்பிடி சமூகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் புதுமை போன்ற துறைகளை ஆதரிக்கும்.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம் அதன் முழு திறனையும் வெளிக்கொணர்வதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு மோடி, மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் துறைமுக வசதிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு இணையாக, விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே துறையை ஒருங்கிணைப்பதற்கும், மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய மேம்பட்ட முனையத்தின் திறப்பு விழா இந்த வரிசையில் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த முனையம், இப்போது ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 3 லட்சமாக இருந்தது.

விழாவில் கலந்து கொண்டவர்கள்

புதிதாகத் திறக்கப்பட்ட இந்த முனையம், இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களுடனான தூத்துக்குடியின் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். தூத்துக்குடி நகரம், வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தின் உதயத்தைக் காண்கிறது.” என்றார். இந்த விழாவில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *