
நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்…
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27 (சனி,ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்தும் “கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழா” திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் உள்ள டி.ஆர்.ஜி.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கியது.
இந்த விதை மற்றும் உணவுத் திருவிழாவை வனம் இந்தியா பவுண்டேஷனின் நிறுவனச் செயலர் ஸ்கை சுந்தரராஜ் தொடக்கி வைத்தார். மொத்தம் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு,கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டு ரக விதைகள், நாட்டு ரக காய்கறிகள், அதன் நாற்றுகள்… மேலும், குதிரைவாலி, வரகு, பனிவரகு, சாமை, திணை, சிவப்பு சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள், அறுபதாம் சம்பா, கருப்பு சீரக சம்பா, வாடன் சம்பா, பச்சை பெருமாள், துளசி வாச சீரக சம்பா, பெருங்கார் ஆகிய பலவகையான பாரம்பரிய அரிசி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உழவர் அமைப்பு சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வெண்டைக்காய், பூசணி, கத்திரிக்காய், அவரைக்காய், சுரக்காய், நாட்டு புடலங்காய், மஞ்சள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டுக் காய்கறி விதைகள், கீரை விதைகள், கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களின் விதைகள் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்யப்பட்டது.
மசாலா பொருள்கள், இயற்கை வழியில் விளைவிக்கப்பட்டு மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்கள், இயற்கை இடுபொருட்கள், இயற்கை உர வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், நாட்டு சர்க்கரை, நீரா பானம், ரசாயனம் கலப்படம் இல்லாத கொசுவிரட்டி, உடல் வலி போக்கும் தைலங்கள், பற்பசைகள், உழவாரக் கருவிகள் இடம் பெற்றிருந்தன. நாட்டு ரக விதைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், 2,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நாட்டு ரக காய்கறிகளின் முக்கியத்துவம், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டன. இதில், முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டு நாட்டு ரக விதைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், “ரசாயன உரங்களால் ஒரு பக்கம் மக்கள் நோயாளிகளாக மாறிக் கொண்டு வரும் நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளாலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், வருங்கால தலைமுறையினர் நமது பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள், நெல்கள் மற்றும் கிழங்கு வகைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும், இதை பாதுகாக்கவுமே இந்த விதைத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில், விவசாயிகள், உழவர் அமைப்புகள், பாரம்பரிய விதைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் பிற இயற்கை விவசாய விளைபொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றனர். அத்துடன், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது.

இயற்கை விவசாய முறைகள், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். பாரம்பரிய விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் இந்த திருவிழாக்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் இருந்து உற்பத்தி செய்யும் காய்கறிகள் வேண்டாம். அதற்கு மாற்றாக நாட்டு ரக விதைகளை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு சுமார் 35,00 பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பியுள்ளனர். இந்த பாரம்ரிய விதைக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம்” என்றார்.