
தூத்துக்குடி: “தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது” என்று தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேசினார்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கினார்.