
தேர்தல் சமயத்தில் கட்சி மாறும் காட்சிகள் வழக்கமானவை. பெரிய கட்சிகள் தங்களின் எதிர் முகாமை பலவீனப்படுத்த மாற்றுக் கட்சிகளின் முக்கியஸ்தர்களை தங்கள் பக்கமாக இழுக்க தனி வியூகமே வகுப்பார்கள். அந்தவகையில், இரண்டு முக்கியமான கட்சிகளில் அதிருப்தியாளர்களாக ஒதுங்கி விலகியிருந்தவர்களை தங்கள் பக்கம் இழுக்க ஆளும்தரப்பு மும்மரம் காட்டி வருகிறதாம்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இதனால் ஓபிஎஸ் இன் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் பக்கமாக ஒதுங்கியிருந்தார். ஓபிஎஸ் இன் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால் அங்கும் மும்மரம் காட்டாமல் இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்க்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். அவர் தவெகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருந்ததாக தகவல்களும் வெளியானது.
தவெக பக்கம் சரியான சிக்னல் கிடைக்காததால் எந்த முடிவையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மட்டுமே பேசி வந்தார். இதைக் கவனித்த சூரிய கட்சி தரப்பு மருது அழகுராஜிடம் பேச ஒரு டீமை அனுப்பியிருக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக போக சூரியக் கட்சியை நோக்கி நகரும் முடிவில் இருக்கிறாராம் மருது அழகுராஜ்.

அதேமாதிரி, நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய காளியம்மாளும் சில மாதங்களாக எந்தப் பக்கமும் செல்லாமல் அமைதி காத்து வந்தார். இரண்டு பெரிய கட்சிகளிலிருந்துமே அவருக்கு அழைப்பு வந்ததாகவும், பனையூர் தரப்பையுமே காளியம்மாள் சந்தித்ததாகவும் தகவல் உண்டு. அங்கு நடந்த பேச்சுவார்த்தையும் அவருக்கு அப்செட்டில் முடிந்ததாம். இதனால் அமைதியாக ஒதுங்கியிருந்த அவரையும் சூரிய கட்சியின் ஒரு டீம் அணுகியிருக்கிறது. காளியம்மாள் எதிர்பார்க்கிற விஷயங்கள் கிடைப்பதால் ஏறக்குறைய அவரும் அங்கு நகரும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மருது அழகுராஜ், காளியம்மாள் இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்தும் பேசியிருக்கின்றனர். தாங்கள் இணையப்போகும் புதிய முகாமை பற்றிதான் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் சொல்கிறது இருவருக்கும் நெருக்கமான தரப்பு.