
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2020 நவம்பர் 6-ல் திருப்பூர் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காங்கயம் காளைக்கு காங்கயம் நகரின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார். அது அறிவிப்போடு நின்று போன நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலினும் அதே உத்தரவாதத்தை அளித்துச் சென்றார். ஆனால், ஆண்டுகள் 4 ஆன நிலையிலும் இன்னும் காளைக்கு சிலை வந்தபாடில்லை. காளைக்கு சிலை வைத்து பெயரெடுப்பது யார் என்பதில் திமுக-வுக்குள்ளேயே இரண்டு கோஷ்டிகள் தெற்கு வடக்காக இழுப்பது தான் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள்.