• July 25, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாநகர் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி பானுமதி. 5 மாத கர்ப்பிணியான இவர், திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் டி. எஸ்.கே. அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று பரிசோதனைக்குச் சென்றிருந்த நிலையில், பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட் வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட குளுக்கோஸ் பாக்கெட் தரம் இல்லாத நிலையில் இருப்பதைக் கண்டு பானுமதி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உறவினர்களுக்கு அவர் தெரியப்படுத்தவே, அவர்கள் மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் காலாவதியான நிலையில் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வழங்கிய குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பரிசோதனை செய்ததில் அவற்றில் சில காலாவதியான நிலையில் இருந்தது தெரியவந்தது. செவிலியர்களின் கவனக்குறைவால் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்திய நிலையில், செவிலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முற்றுகை

இதுகுறித்து மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன் கூறுகையில், “குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காலாவதியான நிலையில் விநியோகப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மே மாதம் 2026 வரை உள்ள பாக்கெட்டுகளுடன், மே மாதம் 2025- வரை உள்ள 7 பாக்கெட்டுகள் கலந்துள்ளன. இதனை கவனிக்காமல் கர்ப்பிணிக்கு தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர், லேப் டெக்னிஷியன் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டது. காலாவதியான 7 குளுக்கோஸ் மட்டும் முறையாக அப்புறப்படுத்தப்பட்டன” என்றார். இதைத் தொடர்ந்து, பானுமதியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *