
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 25) திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சுமார் 2 ஆயிரம் போலீஸார் 5 அடுக்குகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் நாளை இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.