
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் செளமியாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார். படுகாயம் அடைந்த செளமியா திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அதே ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி மரணமடைந்தார். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கோவிந்தசாமி மீது தமிழ்நாட்டிலும் சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. வன்கொடுமை செய்து பெண்ணை கொன்ற வழக்கில் கோவிந்தசாமிக்கு கோர்ட் மரண தண்டனை விதித்தது. 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கோவிந்தசாமியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார் கோவிந்தசாமி. இந்த நிலையில் சிறையில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தப்பிச் சென்றார் கோவிந்தசாமி. போலீசார் தீவிர தேடுதலுக்கிடையே பொதுமக்கள் உதவியுடன் சில மணி நேரங்களிலேயே கைதுசெய்யப்பட்டார் கோவிந்தசாமி. பொதுமக்கள் பார்த்ததைத் தொடர்ந்து ஒரு வீட்டு கிணற்றுக்குள் குதித்து பதுங்கியிருந்த கோவிந்தசாமியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை கண்ணூர் சிறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் குற்றவாளி கோவிந்தசாமி தப்பித்தது எப்படி என தெரியவந்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் இருந்து சில உபகரணங்களை மறைத்து எடுத்துச் சென்று செல்லில் உள்ள கம்பிகளை கடந்த ஒன்றரை மாதங்களாக வெட்டியுள்ளார். வெட்டிய பகுதிகள் வெளியே தெரியாமல் இருக்க துணிகளை போட்டு மறைத்துள்ளார். கம்பிகளை உடைத்து வெளியே சென்ற கோவிந்தசாமி துணிகளை கிழித்து ஒன்றோடு ஒன்றை முடிச்சுபோட்டு கயிறுபோன்று தயார் செய்துள்ளார். பின்னர் பேரல்கள் மற்றும் பால் கேன் ஆகியவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்து சிறையின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி துணிக்கயிற்றை பயன்படுத்தி வெளியே குதித்துள்ளார். தப்பிச் சென்ற பிறகு குருவாயூர் கோயிலுக்குச் சென்று கொள்ளையடிக்கும் திட்டம் வைத்திருந்ததாகவும். அந்த பணத்துடன் வேறு மாநில்த்துக்கு தப்பிச் செல்லவும் திட்டமிட்டிருந்ததாக கோவிந்தசாமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என தெரியாமல் தேடி நடந்தபோது பொதுமக்கள் கண்ணில் பட்டதால் கோவிந்தசாமி போலீஸில் சிக்கியுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதியை கடும்காவல் மிகுந்த செல்லில் அடைத்துவைத்திருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கை மட்டுமே உள்ள கோவிந்தசாமி சுமார் ஏழரை மீட்டர் உயரமுள்ள சிறைச்சாலை மதில் சுவர் ஏறிகுதித்து தப்பியிருக்கிறார். அதிலும் இன்று காலை கைதிகளை கணக்கெடுத்தபோது அனைவரும் இருப்பதாகவே முதலில் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை காம்பவுண்ட் சுவரில் கயிறுபோன்று துணி கட்டப்பட்டிருப்பதை பார்த்தபிறகு சந்தேகத்தில் மீண்டும் சோதனை செய்தபோதுதான் கோவிந்தசாமி தப்பிச்சென்றது தெரியவந்தது. கண்ணூர் மத்தியச்சிறை அதிகாரிகளின் அஜாக்கிரதைதான் குற்றவாளி கோவிந்தசாமி தப்பிச்சென்றதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தசாமியை விய்யூர் மத்திய சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.