
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக கண்காணிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளுமே கூட்டணிகளை கட்டமைப்பது, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்துவது என மும்முரம் காட்டி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக-வும் ஆண்ட கட்சியான அதிமுக-வும் மற்றவர்களை விட ஒருபடி மேலாகவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.