
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு லண்டனில் காலமானார். அவர் மறைவை தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கம்பெனியை தன்வசம் கொண்டு வருவதற்கான வேலையில் அவரது மனைவி பிரியா சச்சிதேவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூரை தனி அறையில் வைத்து கையெழுத்து போடும்படி கூறி கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக ராணி கபூர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராணி கபூர் இது தொடர்பாக சஞ்சய் கபூரின் கம்பெனியான சோனா காம்ஸ்டர் நிறுவனத்தின் போர்டுக்கு உணர்ச்சிப்பூர்வமாக எழுதி இருக்கும் கடிதத்தில், ”என்னிடம் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் என்னை கையெழுத்து போடும்படி கட்டாயப்படுத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலரை கம்பெனியின் பெரும்பான்மை பங்குதாரராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய ராணி கபூர், `அவர்கள் தயாரித்த ஆவணங்கள் நான் தயாரித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மகன் இறந்ததால் நான் மிகவும் மன உலைச்சலில் இருக்கிறேன். அப்படி இருந்தும் தனி அறையில் கதவை அடைத்துக்கொண்டு என்னை கையெழுத்து போடும்படி கட்டாயப்படுத்தினர். அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என்று பல முறை கேட்டுப்பார்த்தேன். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. எனது வங்கிக்கணக்கைக்கூட பயன்படுத்த விடவில்லை. இருக்கும் சிறிது பணத்தில் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது மகன் இறந்து ஒரு மாதத்திற்குள் இவையெல்லாம் நடக்கிறது. எனது மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் போது ‘எதிரிகள்’ எனது குடும்பத்தின் பாரம்பர்ய சொத்தை அபகரிக்க முயல்கின்றனர். கம்பெனி நிர்வாக கூட்டத்தில் குறிப்பிட்ட இயக்குனர்களை(பிரியா சச்சிதேவ்) கபூரின் பிரதிநிதியாக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் என்னிடம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை.
நான் அதிகாரப்பூர்வமாக கம்பெனி போர்டுக்கு யாரையும் நியமிக்கவில்லை. அதோடு எனது சார்பாக சோனா கம்பெனியின் பிரதிநிதியாக செயல்பட யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மறைந்த சஞ்சய் கபூருக்கு மூன்று மனைவிகள் ஆவர். அவர்களில் நடிகை கரிஷ்மா கபூர் உட்பட இரண்டு பேரை விவாகரத்து செய்துவிட்டார்.
சஞ்சய் கபூரிர் பிரியா சச்சிதேவ் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சஞ்சய் கபூர் இறந்தவுடன் அவர் விட்டுச்சென்ற கம்பெனியில் பிரியா தன்னை ஒரு இயக்குநராக இணைத்துக்கொண்டார். இவ்விவகாரத்தில் நடிகை கரிஷ்மா கபூருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனால் அவரும் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சொத்து சண்டை வரும் நாள்களில் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. சஞ்சய் கபூருக்கு அவரது கம்பெனி உட்பட தனிப்பட்ட முறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. சஞ்சய் கபூர் இறந்தபோது பிரியா சச்சிதேவ் அளித்திருந்த பேட்டியில் தனக்கு கரிஷ்மா கபூரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். பிரியா சச்சிதேவிற்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்தது. அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சஞ்சய் கபூரின் சோனா கம்பெனிக்கு சர்வதேச அளவில் கிளைகள் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவில் புதிய கிளையை அந்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து திறக்கப்போவதாக சமீபத்தில் அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.