
சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய உள்துறை அமைச்சரான முதலமைச்சர் தன்னுடைய கடமையிலிருந்து தவறிவிட்டார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இப்படியொரு நிலையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.
காவல்துறையினரின் கொடுங்கோண்மைக்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக எளிய மக்களின் பக்கமாக நின்று போராடியவர். அவருடன் தமிழகக் காவல்துறையின் இன்றைய நிலையைப் பற்றி விரிவாக உரையாடியதிலிருந்து…
“காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறதே. அதனால் அரசுக்கும் கெட்டப் பெயர் உண்டாகிக் கொண்டிருக்கிறதே. ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளராக இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?”
“இது இப்போதுள்ள பிரச்னை இல்லை. எல்லா ஆட்சியிலும் இந்த பிரச்னைகள் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நாம் இந்த ஆட்சி குறித்து பேச வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. 2021 இல் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம் போன்றவற்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டிருந்தார்கள். அதனால் இவர்களின் ஆட்சி கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமென நம்பினோம்.

ஆட்சிக்கு வந்தால் மக்கள் உரிமைகளுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் மீதான வழக்குகளையெல்லாம் நீக்குவோம் என்றனர். சில வழக்குகளைத் திரும்பப் பெறவும் செய்தனர். சிஏஏ க்கு எதிராக போராடியதற்காக என் மீது ஒரு வழக்கு போடப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பை சுட்டிக் காட்டி நீதிமன்றம் சென்று என் மீதான அந்த FIR யை நீக்கச் செய்தேன். ஆனால், அந்த வழக்கில் திடீரென காவல்துறை என் மீது குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
FIR யே இல்லாத வழக்கில் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்? பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்பினார். மறுநாளே என் மீதான குற்றப்பத்திரிகையை காவல்துறை ரத்து செய்தது. மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறைதான் இதையெல்லாம் செய்தது. இவ்வளவு அலட்சியமாக செயல்பட்ட அந்த காவல்நிலையத்துக்குதான், ‘மிகச்சிறந்த காவல்நிலையம்’ என முதல்வரே விருது கொடுத்தார். கீழே என்ன நடக்கிறது என்பது தலைமையில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.
முதல்வரைச் சுற்றி ஒரு சுவரை அமைத்திருக்கிறார்கள். அவரிடம் எந்த உண்மையும் போய்ச் சேர்வதில்லை. அதனால்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர்கள் பேசியதை அவர்களாலேயே செய்ய முடியவில்லை. இங்கே பதில் சொல்வதற்கு கடமைப்பட்டவர்களாக எந்த அதிகாரியும் இல்லை. அதனால்தான் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. சட்டமன்றம் நடக்கும் போது காவல்துறை சித்ரவதையால் விக்னேஷ் என்கிற இளைஞர் கொல்லப்பட்ட போது அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கென்று 41 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். அவை எல்லாமே நல்ல வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அவர் ஓய்வு பெற்ற உடனேயே அந்த வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது.
இப்போது அஜித் குமாரின் கொலைக்கு பிறகு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஒரு மீட்டிங் வைக்கிறார். அந்த மீட்டிங்கின் மீட்டிங் மினிட்ஸ் வெளியாகிறது. ‘போலீஸ் ஸ்டேசனுக்கு வருபவர்களை பேப்பர் வாங்கி வரச் சொல்லாதீர்கள்!’ என ஒரு பாய்ண்ட் அதில் இருக்கிறது. எந்தளவுக்கு காவல்துறை சீர்கெட்டிருக்கிறது பாருங்கள். பல அதிகாரிகள் என்னிடமே புலம்புகிறார்கள். ஒரு சமயம் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் கையை உடை, காலை உடை என்கிறார்கள். இன்னொரு சமயம் ரவுடிகளுக்கு புரியும் பாஷையில் சுட்டுத்தள்ளு என்கிறார்கள்.

இதோ இப்போது அஜித்குமார் கொலை நடந்தவுடன், எதுவும் செய்யாதீர்கள் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே இருப்பவர்கள்தான் காரணம். சைலேந்திர பாபு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சிறப்புப் படைகளை கண்காணிக்க வேண்டும் என்கிறார். அந்த வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி சிறப்புப் படைகளின் செயல்பாட்டை கண்காணித்திருந்தால் அஜித் குமாரின் கொலை நடந்திருக்காதே? இந்த ஆட்சியில் பொறுப்பை ஏற்று பதில் சொல்ல வேண்டிய தேவை எந்த அதிகாரிகளுக்கும் இல்லாமல் போய்விட்டது. பிரச்னைகளின் போது கீழ் நிலையில் உள்ள காவலர்களை காவு கொடுத்துவிடுகிறார்கள். உயரதிகாரிகள் லாபி செய்து தப்பித்து விடுகிறார்கள். அதிகாரிகளை கேள்வி கேட்கக்கூடிய அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக இந்த அரசு இல்லை.”
“அரசியல் தலைமையை மீறிய செல்வாக்குடன் காவல்துறை இயங்குகிறது என்கிறீர்களா?”
“பல்வீர் சிங்கை ஞாபகமிருக்கிறதா? விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கினாரே? அவரை கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருந்தார்கள். 9 மாதம் சஸ்பெண்ட் செய்தார்கள். இப்போது டெல்லி திகாரில் நிம்மதியாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் செய்த துஷ்பிரயோகங்களுக்கு இதுதான் தண்டனையா? விசாரணைக்கு வந்தவர்களின் வாயில் கற்களை போட்டு குத்தி அடித்திருக்கிறார்.

எதாவது விஷமாகியிருந்தால் கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்திருப்பார்கள். இப்படிப்பட்ட கொடூரச் செயலை செய்தவருக்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அசோசியேஷன் நிற்கிறது. அரசும் வேடிக்கைப் பார்க்கிறது. நீதிமன்றத்தில் 22 முறை ஆஜராக அழைக்கப்பட்டதில் 10 முறைதான் ஆஜராகியிருக்கிறார். எளிதில் தப்பித்துவிடலாம் அல்லது அவரை காப்பாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் விடமாட்டோம். காஞ்சிபுரம் வளையாபதி, பிரபு சித்ரவதை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏ.எஸ்.பி உதயகுமாரை காப்பாற்றும் வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் கொடுத்த அறிக்கையை வெளியிடவோ அதன் மீது நடவடிக்கையோ எடுக்கவில்லையே.
இந்த மாதிரியான அதிகாரிகளுக்கு ஆதரவாக வரிந்துக் கட்டிக்கொண்டு ஐ.பி.எஸ் அசோசியேஷன் வருகிறதே. எல்லா ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் குற்றம் சொல்லமாட்டேன். ஒரு 4 அதிகாரிகள் சேர்ந்துகொண்டு இந்த வேலையை செய்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதிகாரிகள்தான் இந்த ஆட்சியையே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.”
“சட்டம் ஒழுங்கு என்பது ஒரு ஆட்சியின் உயிர்நாடி. அதனால்தான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக உள்துறையை முதலமைச்சர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். நீங்கள் இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள். இதெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையா?”
“சென்னையில் காவல்துறையின் சித்ரவதையால் உயிரிழந்த விக்னேஷின் வழக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கையில் அப்படியொரு சம்பவம் அரங்கேறியது. பொதுவாக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கையில் காவல்துறையினர் கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பார்கள். அப்படியிருந்தும் விக்னேஷை அடித்துக் கொன்றார்கள்.

ஸ்டான்லி மருத்துவமனையில் விக்னேஷின் உடற்கூராய்வு ரிப்போர்ட்டை தருவதில் தாமதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது விக்னேஷ் வயிற்றுவலியால், வாந்தியால் உயிரிழந்தார் என எதை எதையோ சொன்னார். அவருக்கு உண்மையான தகவல் சொல்லப்படவில்லை. அவருக்கு எழுதிக்கொடுத்ததை வாசித்துவிட்டு சென்றார். மறுநாள் வந்து விக்னேஷ் காவல்துறையின் சித்ரவதையால்தான் உயிரிழந்தார் என்பதை ஒப்புக்கொண்டார். அப்போது உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் முதல்வரிடம் உண்மையை சொல்லியிருக்க வேண்டாமா?
எப்பேர்ப்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் இருந்த மாநிலம் இது? முதல்வரை பொய் பேச வைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இப்போதும் அவர்கள் நல்ல நிலையில்தானே இருக்கிறார்கள்? டி.எஸ்.பி சுந்தரேசன் பொதுவெளியில் பேசியது தவறுதான். ஆனால், அவரை பொதுவெளியில் பேச வைத்தது யார்? மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரான நீதிபதி மணிக்குமார், சுந்தரேசனை வளையாபதி, பிரபு சித்ரவதை வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமித்தார். அந்த நீதிபதி மணிக்குமாரின் பாதுகாப்பை ரத்து செய்ததே தமிழக காவல்துறை.

ஆணையத்தின் அதிகாரத்தில் தலையிட்டு சுந்தரேசனை பணியிடமாற்றம் செய்ததே? மணிக்குமாரும் போராடினார். சுந்தரேசனை முடிந்தளவுக்கு தக்கவைத்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அழுத்தம் இன்னும் ஏறும்போதுதான் அவர் மயிலாடுதுறை மதுவிலக்குத்துறைக்கு மாற்றப்படுகிறார். ஆணையங்களை இந்த அரசு தன்னிட்சையாக இயங்க விடுவதே இல்லையே. எல்லா ஆணையங்களிலும் திமுக ஆட்கள்தான் இருக்கிறார்கள். அதனால்தான் தேசிய மனித உரிமை ஆணையம், குழந்தைகள் ஆணையம், மகளிர் ஆணையம் எல்லாம் தமிழகத்துக்கு வருகிறது.

எங்கள் மாநிலத்துக்கு நீங்கள் ஏன் வருகிறீர்கள்? என தலைமைச் செயலர் தடுத்திருக்க வேண்டாமா? தடுக்கவில்லை. ஏனெனில், இங்கிருக்கும் ஆணையங்களை இவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. உயரதிகாரிகளின் ராஜ்ஜியம்தான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. “
“காவல்துறை இவ்வளவு கட்டற்று போயிருப்பதாக சொல்கிறீர்கள். இதை சீர்செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?”
“சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பி.என்.பிரகாஷ் காவல்துறையினரின் ‘Mental Wellness’ செயல்பாடுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றார். காவலர்களின் மனநல ஆரோக்கியத்தை இவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லையே. இவர்கள் நடத்திய மனநல ஆரோக்கிய பயிற்சியில் கலந்துகொண்டு, மனரீதியாக பிரச்னை இருக்கக்கூடிய அதிகாரிகள் கண்டறியப்பட்டிருக்கின்றனர்.

பெரிய பெயர் பட்டியலே இருக்கிறது. அதை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. மனரீதியாக பிரச்னை உள்ள அதிகாரிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு மேலும் பணிகளை வழங்கினால் தவறுகள் நடக்கத்தான் செய்யும். முதல்வர்தான் இதிலெல்லாம் தலையிட வேண்டும். உங்களுக்கு விருப்பமான மனித உரிமை செயற்பாட்டாளர்களை அழைத்தாவது பேசுங்கள். அப்போதுதான் உண்மை புரியும். இல்லையேல் ஒரு பெரிய அசம்பாவிதத்தை நோக்கி இந்த காவல்துறை உங்களை அழைத்துச் செல்லும்.”
“ஸ்டெர்லைட் வழக்கு, சாத்தான்குளம் வழக்கு, அஜித்குமார் வழக்கு போன்றவற்றின் தற்போதைய நிலை என்ன என கொஞ்சம் சொல்லுங்களேன்.”
“ஸ்டெர்லைட் வழக்கைப் பொறுத்தவரைக்கும் அருணா ஜெகதீசனின் அறிக்கை வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சாத்தான்குளம் வழக்கில் 252 நாட்கள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணை நடந்திருக்கிறது. விசாரணை சரியான திசையில் செல்கிறது. ஆனாலும் தாமதம் ஆகிறது. காரணம் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவில்லை. ஒரு நீதிபதி விசாரித்துவிட்டு சென்றுவிடுகிறார். அடுத்து வரும் நீதிபதி ஆரம்பத்திலிருந்து வழக்கை ஆய்ந்து புரிந்து விசாரிக்க வேண்டியிருக்கிறது.

மூன்று நீதிபதிகள் இதுவரை மாறிவிட்டார்கள். இறுதித் தீர்ப்பை அளிக்கும் நீதிபதி எதனடிப்படையில் எந்த புரிதலின் அடிப்படையில் தீர்ப்பை அளிப்பார்? அரசாங்கம் இதற்கெல்லாம் சரியான நடைமுறைகளை செய்திருக்க வேண்டும்.
அஜித்குமாரின் வழக்கை நீதிமன்றம் சரியான திசையில் எடுத்துச் செல்கிறது. ஆனால், அதிலும் சில விஷயங்களை குறிப்பாக பேச வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு ‘Victim Protection Scheme’ படி அரசு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேமாதிரி, அஜித்குமாரோடு சித்ரவதைக்குள்ளான அருண், பிரவீன் போன்றவர்களுக்கும் முறையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.
பிரவீன் அறநிலையத்துறை ஊழியர். பணிக்கு வராவிட்டாலும் அவருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். அருண் ஆட்டோ ஓட்டுநர். ‘சார்…சிபிஐ கூப்புடுறாங்க. 10 மணியில இருந்து 5 மணி வரை அங்கேயே நேரம் போயிடுது. இன்னும் எத்தனை நாள் சார் விசாரிப்பாங்க?’ என அருண் என்னிடம் கேட்கிறார். அவருக்கான வாழ்வாதாரத்தை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கில் பரிபூரண நீதி கிடைக்கும்.”
“கடந்த 4 ஆண்டுகளில் 31 காவல்/ சிறை சித்ரவதை மரணங்கள் நடந்திருப்பதாக நீங்கள்தான் புள்ளிவிவரங்களை வெளியிட்டீர்கள். அந்த 31 குடும்பங்களுக்கும் முறையான இழப்பீடு சென்று சேர்ந்திருக்கிறதா?”
“நிச்சயமாக இல்லை. அதிகபட்சமாக நான்கைந்து குடும்பங்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக வழக்கு நடத்தி போராடிக் கொண்டிருக்கிறோம். 2010 இல் சைலேந்திரபாபு உதவி கமிஷனராக இருந்தபோது, அசோக்நகரில் ஆ.கு.சுப்பிரமணியன் என்பவரை காவல்துறை சித்ரவதை செய்து காலை முறித்தது. அவருக்கு நாங்கள் மதுரையில் சிகிச்சை கொடுத்து குணப்படுத்தினோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2024 இல்தான் அவருக்கு 20 லட்ச ரூபாயை இழப்பீடை வாங்கிக் கொடுத்தோம். ஒரு வழக்கில் உரிய இழப்பீட்டை பெற 14 ஆண்டுகள் ஆகிறது. இதுதான் யதார்த்த நிலைமை.”