
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.
இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டரை வயதில் ஹனிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூன் 10-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
இதில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு நேற்று மதியம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புனித நீர் எடுப்பதற்காக முக்கொம்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் பூவரசன் மனைவி, மகள் இருவரும் சென்றுள்ளனர்.
அங்குக் கிராம மக்கள் குடங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் வாணவெடி வெடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்படி, வெடிப்பதற்காக வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி வெடிக்காமல் கீழ்நோக்கி வந்து பூவரசன் மனைவி மனோகரி தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்றபோது மனோகரியின் வலது தோள்பட்டை மீது விழுந்து வெடித்துள்ளது.
இதில், மனோகரிக்கு தோள்பட்டையிலும், அவரது மகள் ஹனிக்கா கழுத்துப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கிராம மக்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற போது சிறுமி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்த வாத்தலை காவல் நிலைய போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு உட்படுத்தி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கிராமத்திற்குக் கொண்டு சென்றபோது கிராம மக்கள் சிறுமியின் உடலைப் பார்த்துக் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கோயில் விழாவை முன்னிட்டு வெடி வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.