• July 25, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 – ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தன்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. அதனால், விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். எனவே, எனக்கு விருப்ப ஓய்வு செல்ல அனுமதி வழங்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். அதில் இந்த விவகாரத்தை தொட்டு பேசியவர்,

dsp

“மயிலாடுதுறையில் நேர்மையாக பணிபுரிந்த டி.எஸ்.பி-யின் (சுந்தரேசன்) வாகனத்தை பறித்து அவரை பணிசெய்ய விடாமல் தடுத்து, சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

அதேபோல், திருச்சியில் தற்போது குற்றப்பிரிவு டி.எஸ்.பி-யாக பணியாற்றும் பரத் சீனிவாஸ் மனஉளைச்சலால் பணியை ராஜினாமா செய்வதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது?. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தால், காவல்துறையில் சில சாத்தியமற்ற வேலைகளை செய்யச் சொல்லி உயரதிகாரிகள் வற்புறுத்துவதாகவும், அதனால் மனஉளைச்சல் காரணமாக அவர் விரும்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்தாகவும் கூறப்படுகிறது.

ஆனால், டி.எஸ்.பி பரத் சீனிவாசோ, “நான் மனஉளைச்சலில் இருந்தது உண்மைதான். அதனால், விருப்ப ஓய்வு கடிதம் தயார் செய்து நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தேன். ஆனால், எனது நலனில் அக்கறைகொண்டு பலரும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்,இந்த கடிதத்தை யாருக்கும் அனுப்பவில்லை’ என்று கூறி வருகிறாராம்.

திருச்சியில் பணியாற்றும் டி.எஸ்.பி ஒருவர் மனஉளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படும் சம்பவம், திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *