
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயத்தில் திடீரென காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை புலிகள் சரணாலயத்தையும் இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, கரடி, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகைச் செடிகளும் உள்ளன.
இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பீட் 3-ல் திடீரென காட்டுத் தீ பற்றி, தீ மளமளவென எரிந்து வருகிறது. மலைப்பகுதியில் பற்றிய தீ சரணாலயப் பகுதி முழுவதும் பற்றி எரிந்து வருகிறது.
இப்படிப் பற்றி எரியும் காட்டுத் தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதோடு, சிறிய வகை வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக மலைப்பகுதியில் தீயானது வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் தீயானது அணைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட வேண்டியது வனத்துறையின் பொறுப்பு. இப்படி தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும் போது காட்டுத்தீ பரவாமல் இருக்கும்.
இன்று ஏற்பட்டுள்ள இந்தக் காட்டுத் தீயானது வேகமாகப் பரவி வருவதால் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டதா எனச் சந்தேகம் எழுகின்றது.
வனப்பகுதியிலுள்ள சில இடங்களில் புற்கள், செடிகள், மரங்கள் போன்றவற்றை வெட்டி அகற்றி, வெற்றுத் தரையிலான ஒரு பாதை போலப் பல கி.மீ., துாரத்திற்கு உருவாக்குவர். இதுதான் தீத்தடுப்பு கோடுகள்.