
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
கந்தர்வகோட்டைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வெள்ளை முனியன் கோயில் பகுதியில் டிராக்டர் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டிராக்டரில் ஏறி அமர்ந்து சிறிது தூரம் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
பின்னர் டிராக்டரை விட்டு இறங்கி மீண்டும் பிரசார பேருந்தில் பயணித்து கந்தர்வக்கோட்டை காந்தி சிலைக்கு வருகை தந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது அவர் அணிந்திருந்த பச்சைத் துண்டு காற்றில் வேகமாக பறந்ததால் எரிச்சல் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தோளில் இருந்த துண்டை எடுத்து உதவியாளரிடம் கொடுத்தார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி உரைத்தொடங்கிய சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்த நிலையில், சாரல் மழையிலும் பேசினார். அவருக்கு, ஆட்டுக்குட்டியும் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “கந்தர்வகோட்டை தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி. விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நிறைய திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
இந்த பூமி செல்வம் செழிப்பாக பசுமையாக எங்கே பார்த்தாலும் விளைநிலங்களில் கரும்பு, மஞ்சள், வாழை செழித்து வர நானே நேரடியாக வந்து காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடக்கி வைத்தேன்.
முதற்கட்டமாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தேன். தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தற்பொழுது அந்தத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் குளங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும். தண்ணீர் பிரச்னை நீங்கியிருக்கும்.
விவசாயிகளுக்கு விரோதமாக ஆட்சி நடத்துபவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைத்துள்ள இந்த திட்டம், அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் நிறைவேற்றப்படும்.
திட்டத்தின் மதிப்பு ரூ. 14,400 கோடி. இந்த அற்புதமான திட்டத்தை இந்த பூமியில் வசிக்கின்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிலையாக விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் நிரந்தரமாக ஒரு திட்டத்தை கொண்டு வந்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
அதேபோல், கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டு கட்டமாக சுமார் 574 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை தீட்டி நேரடியாக நானே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது வந்து திறந்து வைத்தேன். இதனால், 2,306 கிராமங்கள் பயன்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வழங்கிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.

இன்றைய ஆட்சியாளர்கள் இதில் சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினால் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற காரணத்தினால் மக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரில் கூட அரசியல் செய்கின்ற ஒரே கட்சி திமுக, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று புகார் வந்துள்ளது.
அதிமுக ஆட்சி மலர்ந்த உடன் தங்கு தடையின்றி 2,036 கிராமங்களுக்கும் நிறைவாக தண்ணீர் கிடைக்கும்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட கந்தர்வகோட்டை பாலிடெக்னிக் கல்லூரி, மருதன்கோன் விடுதி அரசு கலைக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மக்களுக்கு என்ன தேவை, மாணவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு செயல்பட்ட அரசு அதிமுக அரசு.
மாணவர்களுக்கு அறிவு பெட்டகங்களை பட்டப்படிப்பு மூலம் கொடுத்த ஒரே அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். எடப்பாடி பழனிச்சாமி போகும் இடம் எல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கந்தர்வகோட்டை மக்கள் வெள்ளத்தை வந்து பார்த்த பிறகாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பு இருக்கிறதா?.
கொரோனா காலத்தில் ஓராண்டு கல்வி நிலையங்களுக்கு செல்லாதவர்களை ஆல் பாஸ் போட்ட அரசு அ.தி.மு.க அரசு.

யார் யாருக்கு என்னென்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்த அரசாங்கம் அ.தி.மு.க அரசு. மும்முனை மின்சாரத்தை முறையாக விவசாயிகளுக்கு கொண்டு வந்து சேர்த்த அரசு அ.தி.மு.க அரசு.
அ.தி.மு.க ஆட்சி மலர்ந்த உடன் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கி விலையில்லா வீடு கட்டிக் கொடுக்கப்படும். விலைவாசி உயர்வை தடுக்காத அரசு தேவையா? .
கடந்த 2021-ம் வருட தேர்தலில் தி.மு.க-வில் 525 அறிவிப்பு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தனர். அ.தி.மு.க ஆட்சியில் பொய்யான வாக்குறுதியை கூறி எப்போதும் ஏமாற்றியது கிடையாது.
சிலிண்டருக்கு மானியம், 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள், கல்வி கடன் ரத்து என்று சொன்னார்கள். ஆனால், இதையெல்லாம் ரத்து செய்தார்களா?. ஏழை மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க அரசு.
ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மருத்துவர் படிப்பில் சேர்க்க வைத்த அரசு.

தி.மு.க-காரர்கள் என்ன பேசுகிறார்கள், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்று. இது நம்ம கட்சி. யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி வைக்கலாம். இவர்களுக்கு என்ன கசக்கிறது?. இவர்கள் ஏன் எரிச்சல்படுகின்றனர்?. அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் என்று கூட்டணி வைத்ததோ அன்றைய தினமே ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது.
வரும் 2026 – ம் வருட தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். ஸ்டாலினும், அவரது சகாக்களும் பேசுவது எடப்பாடி பழனிச்சாமி மதவாத கட்சியுடன் சேர்ந்து விட்டார் என்று.
நீங்கள் எந்த கட்சியோடு சேர்ந்து இருந்தீர்கள். 1999 -ல் நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க-வுடன் கூட்டணி. 2001 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று தி.மு.க கூட்டணி வைத்ததா, இல்லையா?. அப்போது, அது என்ன கட்சி?. இப்போது மதவாத கட்சி. அப்போது நல்ல கட்சியா?. எவ்வளவு நாடகம் நடிக்கிறார்கள்.

மக்களை திசை திருப்புவதற்காக ஏதேதோ பேசி மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மு.க.ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும் மக்கள் நம்பப் போவதில்லை. வரும் 2026-ல் அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெறும். தனி பெரும்பான்மையோடு அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்.
அ.தி.மு.க கூட்டணிக்காக கடையை விரித்து வைத்துள்ளனர், வியாபாரம் ஆகவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், அ.தி.மு.க ஐ.எஸ்.ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி. உங்கள் கட்சி மாதிரி வீடு வீடாக போய் கதவைத் தட்டி தி.மு.க-வில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல அ.தி.மு.க.
இந்தியாவில் எந்த கட்சியாவது வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்ப்பதற்கு பிச்சை எடுத்த கட்சி உண்டா?. தி.மு.க-வினர்தான் அப்படி செய்கின்றனர். அவர்கள் நம்மை பார்த்து பேச என்ன தகுதி இருக்கிறது?.

அ.தி.மு.க-வை பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி. தி.மு.க மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது. தொண்டர்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டது. தி.மு.க-வில் உறுப்பினராக சேர கூட யாரும் முன் வராததால் தான் கதவை தட்டி தட்டி வீடு வீடாக பிச்சை எடுப்பதை போல தி.மு.க-வில் உறுப்பினர் சேர்க்கை இன்று நடந்து வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்று பெயரை அழகாக வைத்துள்ளனர் மக்களை ஏமாற்றுவதற்காக.

இன்னும் எட்டு மாதம்தான் ஆட்சி இருக்கிறது. எட்டு மாதத்தில் எப்படி இதையெல்லாம் தீர்த்து வைப்பீர்கள்?. அப்படி என்றால் இதுவரைக்கும் நான்கு ஆண்டு காலமாக இந்த அரசாங்கம் என்ன செய்தது.
46 பிரச்னைகள் இருக்கிறது என்று நீங்களே நோட்டீசில் அடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் 46 பிரச்னையை தீர்க்காத அரசாங்கம் தேவையா?. இதேபோல்தான், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்பொழுது ஸ்டாலின் ஊர் ஊராக சென்று போர்வை விரித்து மக்களையெல்லாம் வரவழைத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுக்கு நிறைய செய்ய உள்ளது. அதனால், உங்களது குறைகளை மனுக்களாக எழுதி நான் கொண்டு வந்த பெட்டியில் போடுங்கள் என்று கூறி மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டு போட்டு பூட்டிவிட்டு அதை கொண்டு போய் வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் சீலை உடைத்து பெட்டியை திறந்து குறைகளை தீர்த்திருக்க வேண்டும். ஏற்கனவே, மக்களின் பிரச்னைகளை மனுக்களாக கொடுத்து விட்டனர். பிறகு, எதற்கு பிரச்சனை இருக்கிறது என்று நீங்களே கொடுக்கிறீர்கள். அப்படி என்றால், இந்த ஆட்சியில் பிரச்னையை தீர்க்கவில்லை. ஏற்கனவே, நீங்கள் வாங்கிய மனுக்கள் அத்தனையும் பொய். மக்களை ஏமாற்றுவதற்காக மனு வாங்குகின்ற நாடகத்தை தி.மு.க தலைவர் அரங்கேற்றியுள்ளார். இப்படி, மக்களை ஏமாற்றுகின்ற கட்சி தேவையா?.

நாங்களெல்லாம் வந்தால் இவர்களுக்கு பிடிக்காதா?. விஜயபாஸ்கர் வரலாம்.. இங்கிருக்கின்ற ஒரு அம்மா கூட வரலாம்… இவர்களெல்லாம் முதலமைச்சராக வந்தால் தப்பா?. இது, ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் வரலாம். கருணாநிதி குடும்பத்திற்காக தமிழ்நாடு பட்டா போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இவர்கள் வெற்றி பெற்று வந்தால் கந்தர்வ கோட்டையையும் பட்டா போட்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல். வரும் 2026 – ம் வருட சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு விலைவாசி குறைய அற்புதமான ஆட்சி தமிழ்நாட்டில் மலர அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.