
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் சக்தீஷ்வர் (17). 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்காக காத்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே சரிந்தார். பெற்றோர் உடனடியாக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலின்பேரில், குளச்சல் போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சக்தீஷ்வரின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர் யூடியூப் பார்த்து டயட் மேற்கொண்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “12-ம் வகுப்பு படித்து முடித்த சக்தீஷ்வர் உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறிவந்திருக்கிறார். கல்லூரிக்குச் செல்லும்போது உடல் பருமனாக இருந்தால் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம் எனக்கூறி உடல் எடையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அதற்காக யூடியூப் பார்த்து டயட் கண்ட்ரோலை கடைபிடித்து வந்திருக்கிறார். அதன்படி, கடந்த மூன்று மாதங்களாக பழங்கள், பழச்சாறு போன்றவற்றை அருந்தி உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு வந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும். முழு உடல் பரிசோதனைக்கு பின் அவர்களின் பரிந்துரை அடிப்படையில் உடல் பயிற்சி மற்றும் டயட் கண்ட்ரோல் மேற்கொண்டால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே மரணமடைந்த சிறுவன் சக்தீஷ்வரின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பெரில் தலைமையிலான மருத்துவர்கள் சக்தீஷ்வரின் கண்களை தானமாக பெற்றுக்கொண்டனர்.