• July 25, 2025
  • NewsEditor
  • 0

‘கையில காசு இருக்கு, என் அக்கவுன்ட்ல காசு இல்லை… நான் உனக்குத் தந்துடுறேன்… உன் அக்கவுன்டல இருந்து நான் சொல்ற அக்கவுன்டுக்கு அனுப்புறியா?’, ‘உன்னோட அக்கவுன்டுக்குப் பணம் அனுப்புறேன்… ஃபிளைட் டிக்கெட் போட்டுத் தர்றீயா?’, ‘என்னோட அக்கவுன்ட்ல இருந்து வேறொரு அக்கவுன்டுக்கு பணம் அனுப்பணும்… மாத்தி அனுப்பிடுவோமோன்னு பயமா இருக்கு. நான் உனக்கு அனுப்புறேன். நீ அவங்களுக்கு அனுப்பிடுறீயா..?’

இதுபோன்ற உதவிகள் நமக்கு நெருக்கமானவர்கள் பலரிடம் இருந்தும் அதிகமமாக இந்தக் காலத்தில் கேட்கப்படுகின்றன.

கோபால்
கிருஷ்ண ராஜூ

‘சரி… சின்ன உதவிதானே’ என்று நாமும் இப்படிக் கேட்கிறவர்களுக்குப் பரிவர்த்தனை செய்து கொடுக்கிறோம். இதனால் நமக்கு எந்தப் பலனும் கிடையாது. ஓர் உதவி செய்தோம் என்ற திருப்தி அவ்வளவுதான். ஆனால், இந்த உதவிகளுக்குப் பின்னால், நமது வங்கிக் கணக்குக்கு ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் வந்தும், போய்க்கொண்டும் இருக்கிறது.

இதை வருமான வரித்துறை எந்த வரையறையின் கீழ் கொண்டுவரும் என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதுகுறித்து நமக்கு விரிவாக விளக்குகிறார் ஆடிட்டர் கோபால் கிருஷ்ண ராஜூ.

“இது போன்ற சூழல்களை முடிந்தளவு தவிர்த்துவிடுவது மிக மிக நல்லது. இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், நமது சம்பளம் முதல் பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே அரசாங்கத்திடம் பதிவாகி விடுகிறது.

நமது வருமானத்துக்கு மீறி, நம் வங்கிக் கணக்குக்கு பணம் வருவதும் போவதுமாக இருந்தால், நிச்சயம் அதை வருமான வரித்துறை கண்காணிக்கும். அதுகுறித்து நம்மிடம் கேள்வியும் எழுப்பும். இதனால், தேவையில்லாத சிக்கல் நமக்குத்தான். எனவே, உங்களிடம் இது போன்ற உதவிகளைக் கேட்பவர்களிடம் நாசூக்காகப் பேசிப் புரிய வைப்பது நல்லது.

அதையும் மீறி, உதவி செய்தே ஆக வேண்டும் என்கிறபட்சத்தில், இந்தப் பரிவர்த்தனை களுக்கான ஆதாரங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை சரியாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, பெரிய தொகைகளுக்கு இவை ரொம்பவே முக்கியம். ஒப்பந்தம் என்றதும் குழப்பம் வேண்டாம். நீங்கள் யாருக்கு உதவி செய்கிறீர்களோ, அவரும், நீங்களும் இதற்காகத்தான் இந்தப் பணப் பரிமாற்றம் நடக்கிறது என்று எழுதி, ஒப்புதலோடு சாட்சிகளுடன் கையொப்பமிட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் ஆகும்.

இல்லையென்றால், உங்கள் கணக்குக்கு வரும் பணம் உங்களது வருமானமாகவே கருதப்படும். ஆனால், ஒப்பந்தம் இருக்கும் பட்சத்தில், வருமான வரித்துறை உங்களிடம் கேள்வி கேட்கும்போது, அதை ஆதாரமாகக் காட்டலாம். உங்களுக்கு எந்தவிதச் சிக்கலும் எழாது.

இது போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இன்னொரு வழி இருக்கிறது, அதுதான் ‘எஸ்க்ரோ கணக்கு’ (Escrow Account). எஸ்க்ரோ கணக்கு என்பது தற்காலிகமான வங்கிக் கணக்கு ஆகும். இதை எந்த வங்கியில் வேண்டுமானாலும் நாம் தொடங்கலாம்.

உங்களிடம் ஒருவர் வந்து குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து இன்னொருவருக்கு அனுப்புமாறு உதவி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதனால், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க, எஸ்க்ரோ கணக்கைப் புதிதாகத் தொடங்கி, அந்தக் கணக்கில் மேலே குறிப்பிட்டுள்ள பணத்தை வைத்துக் கொள்ளலாம். யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்புமாறு நீங்கள் வங்கியிடம் சொன்னால், உங்களுடைய ஒப்புதலின் அடிப்படையில் வங்கி அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிடும்.

எஸ்க்ரோ கணக்கைப் பொறுத்தவரை, அதில் நம்முடைய பணம் எப்போதும் ஜீரோவாகத்தான் இருக்கும். மற்றவர்களுக்குப் போக வேண்டிய பணம்தான் அந்தக் கணக்கில் வந்து, போய் க்கொண்டிருக்கும். இதனால், வருமான வரித்துறையில் இருந்து நமக்கு எந்தப் பிரச்னையும் வராது.

ஆக, எஸ்க்ரோ அக்கவுன்ட் மூலம் பணம் அனுப்பினால், பிரச்னைகள் வராது. ஆனால், அந்தப் பரிவர்த்தனை அதிக தொகைகளுக்கு தான். அத்துடன், பணத்தைப் பெறுபவரிடமும் அனுப்புபவரிடமும் இந்த எஸ்க்ரோ அக்கவுன்ட் இருக்க வேண்டும்.

தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் உங்களையும், உங்கள் பணத்தை யும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

உதவும் மனப்பான்மை கொண்ட மக்களே… நோட் திஸ் பாயின்ட்..!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *