
மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது (ஜுலை 23 முதல்).
இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று காலில் காயமடைந்தார்.
அந்த பந்தில் தடுமாறி ஒரு ரன் எடுத்த பண்ட்டால் அதற்கு மேல் களத்தில் நிற்கக்கூட முடியவில்லை. உடனடியாக 37 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் பெவியலியன் திரும்பினார்.
பின்னர் பரிசோதனையில் பண்ட்டின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இவ்வாறான சூழலில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பில், இந்த டெஸ்ட் போட்டியில் பண்ட்டுக்கு பதில் துருவ் ஜோரல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும், அணியின் தேவைக்கேற்ப பண்ட் பேட்டிங் ஆடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஷர்துல் தாக்கூர் அவுட்டானதும் பண்ட் களமிறங்கினர்.
காயம் காரணமாக மெதுவாகத் தாங்கி நடந்தவாறு களத்துக்குள் நுழைந்த பண்ட்டுக்கு மைதானத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டினர்.
. . !
When Old Trafford stood up to applaud a brave Rishabh Pant #TeamIndia | #ENGvIND | @RishabhPant17 pic.twitter.com/nxT2xZp134
— BCCI (@BCCI) July 24, 2025
37 ரன்களிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்த பண்ட் வெற்றிகரமாக அரைசதம் கடந்தார். அதையடுத்து 54 ரன்களில் இருந்தபோது ஆர்ச்சரின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
அவரைத்தொடர்ந்து பும்ராவும் அவுட்டாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு இந்தியா அவுட்டானது.
இந்த நிலையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டும் அணிக்காக களமிறங்கியதற்காக பண்ட்டை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “வலியைக் கடந்து ஆடுவதும் அதிலிருந்து எழுவதும்தான் மீள்தன்மை.
பண்ட் காயத்துடன் மீண்டும் ஆட வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய மகத்தான தன்மையைக் காட்டினார்.

இந்த அரைசதமானது, உங்களுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான மனஉறுதியை நினைவூட்டுகிறது.
இந்தத் துணிச்சலான முயற்சி, நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்.
நன்றாக விளையாடினீர்கள் ரிஷப்” என்று பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.