• July 25, 2025
  • NewsEditor
  • 0

கேளாவைச் சேர்ந்த நடிகர் விநாயகன் தனது செயல்பாடுகள் மூலமும், கருத்துகள் தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

தனது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அதற்கு முன்பு, முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மரணமடைந்த சமயத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில், “யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். என்னுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் இறந்துவிட்டார். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை விடுகின்றனர். அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன்” என கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோஷமிட்ட விநாயகன்

இந்த நிலையில் சி.பி.எம் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை ஒட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு உடை அணிந்து ‘இங்குலாப் சிந்தபாத்’ என கோஷமிடும் வீடியோ வைரலானது.

உம்மன் சாண்டி மறைவை மட்டும் விமர்சித்ததாக விநாயகனை காங்கிரஸ் கட்சியினர் கண்டித்து கருத்துகளை வெளியிட்டனர்.

விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

நடிகர் விநாயகன்

அதில், “என் தந்தையும் இறந்துவிட்டார், சகாவு வி.எஸ்.அச்சுதானந்தனும் இறந்துவிட்டார். காந்தியும் இறந்துவிட்டார், நேருவும் இறந்துவிட்டார், இந்திராவும் இறந்துவிட்டார், ராஜிவ் காந்தியும் இறந்துவிட்டார், கருணாகரனும் இறந்துவிட்டார். ஹைபி ஈடனின் தந்தை ஜார்ஜ் ஈடனும் இறந்துவிட்டார். உங்கள் தாயின் நாயர் சாண்டி என்றால் அவரும் இறந்துவிட்டார். இறந்துவிட்டனர், இறந்துவிட்டனர்…” என பதிவிட்டதுடன் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நடிகர் விநாயகனின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *