• July 25, 2025
  • NewsEditor
  • 0

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி ஒரு நேரத்தில் உலக அளவில் பெரிய கோடீஸ்வரராக இருந்தார். ஆனால் தவறான நிர்வாகத்தால் அவரது பெரும்பாலான கம்பெனிகள் திவாலானது. ரிலையன்ஸ் கம்ப்யூனிகேசன் வாங்கிய கடன்களை திரும்ப கொடுக்கவில்லை. இதற்காக சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. தற்போது அனில் அம்பானியிடம் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா போன்ற நிறுவனங்கள் மட்டுமே கையில் இருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் கடனால் மூடப்பட்டுவிட்டது. அல்லது அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கிகள் அனில் அம்பானியின் கம்பெனியை பிடுங்கி ஏலத்தில் விட்டுள்ளது.

இந்நிலையில் யெஸ் வங்கியில் இருந்து ரூ.3000 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனி கடன் வாங்கியது. இக்கடனை ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டது. 2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் ரூ.3000 கோடியை கடன் வாங்கியது. யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதிய ஆவணங்கள் இல்லாமல் கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் கொடுக்க யெஸ் வங்கி நிர்வாகிகள், உரிமையாளர்களும் தேவையான உதவி செய்துள்ளனர். கடன் வாங்க தனிப்பட்ட முறையில் யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதை சி.பி.ஐ. சமீபத்தில் கண்டுபிடித்து நிதி முறைகேடு தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து செபி அமைப்பும் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று காலையில் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது தொடர்பாக 25 பேரிடம் விசாரணை நடத்தினர். அதோடு இம்மோசடியில் தொடர்புடைய 50 நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டு 35 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் அனில் அம்பானியின் வீடு இடம் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அனில் அம்பானியின் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அமலாக்கப் பிரிவின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அனில் அம்பானி குரூப் மிகவும் திட்டமிட்டு வங்கியையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தேவையான விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு கடன் தொகையை வழங்கியது, முன் தேதியிட்டு கடனுக்கு ஒப்புதல் கொடுத்தது, கம்பெனி இதற்கு முன்பு வாங்கிய கடன்கள் குறித்து எந்த வித விசாரணையும் நடத்தாமல் விட்டது என கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இது தவிர வருமான வரித்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் அனில் அம்பானிக்கு எதிராக அன்னிய செலாவனி மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேங்க் ஆஃப் பரோடா, தேசிய ஹவுசிங் பேங்க் போன்றவையும் அனில் அம்பானி குரூப்பிற்கு எதிராக தங்களது தரப்பு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே அமலாக்கப் பிரிவு இந்த ரெய்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ரெய்டு குறித்து அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு எங்களது நிறுவனத்தின் செயல்பாடுகளில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் கம்பெனிக்கு எதிரான புகார்கள் 10 ஆண்டுகளுக்கு முந்தியவை… இந்த நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராவிற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனில் அம்பானிக்கு எதிராக இந்த அளவுக்கு ரெய்டு நடத்தப்பட்டதில்லை. இதனால் அனில் அம்பானி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த ரெய்டை தொடர்ந்து ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் இன்றைய பங்குச்சந்தையில் 5 சதவீதம் வரை சரிந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *