
இந்தியா முழுவதும் அறியப்படக் கூடிய மலையாள நடிகர் ஃபகத் பாசில். தமிழிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது வடிவேலுவுடன் நடித்துள்ள மாரீசன் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் சூழலில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு இதேப் போல தனது சி யூ சூன் படத்தை புரமோட் செய்கையில் ஓர் உரையாடலில், ஸ்பெயின் நாட்டில் ஊபர் ஓட்டுநராக பணியாற்றுவதுதான் தனது கனவு என வழக்கத்துக்கு மாறான ஆசையை வெளிப்படுத்தி பேசு பொருளாக்கினார்.
தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசை அப்படியேதான் இருக்கிறதா என தி ஹாலிவுட் ரிப்போர்டர் நேர்காணலில் கேட்கப்பட்டபோது, அது கொஞ்சமும் மாறவில்லை என பதிலளித்துள்ளார்.
Fahad Fazil-ன் கனவு!
“ஆமாம் நிச்சயமாக… சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் பார்சிலோனாவில் இருந்தபோது அதைப் பற்றி ஆழமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். மக்கள் என்னை முழுவதுமாக விட்டுவிட்டால் தான் அது சாத்தியமாகும், இல்லையா?
நகைச்சுவையை விட்டுவிடுங்கள், ஒருவரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்வது ஒரு அழகான விஷயம் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் நாம் மக்கள் சென்றடைய வேண்டிய இடத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
இப்போதும் எனக்கு வண்டி ஓட்ட நேரம் கிடைக்கும்போது அதைச் செய்கிறேன். அங்கே, இங்கே என எல்லாப் பக்கமும் செல்கிறேன். எனக்கு இன்னமும் ட்ரைவிங் பிடித்திருக்கிறது. நான் ட்ரைவ் செய்வதைத்தான் எனக்கான நேரமாக (Me time) கருதுகிறேன். வாகனம் ஓட்டும்போது சிந்திப்பதற்கும் நன்றாக இருக்கிறது” என்றார்.
ஃபகத் பாசில் அதிகம் பொது இடங்களில் தோன்றாத ஒரு நடிகர். சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் அல்ல. “ஆன்லைனில் இல்லாமல் இருப்பது சமூகத்திடம் ஒத்திருப்பதை கடினமாக்கவில்லையா, குறிப்பாக ஜென் Z ரசிகர்களுடன்…” என அவரிடம் கேட்கப்பட்டபோது அந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்தார்.
“நான் மோசமான படங்களை உருவாக்கும்போது மட்டுமே புறக்கணிக்கப்படுவேன். வேறு எதுவும் என்னை வெளியில் தள்ள முடியாது. அப்போதுதான் மக்கள் என்னிடமிருந்து விலகத் தொடங்குவார்கள். நான் என் முயற்சிகளில் நேர்மையாக இருக்கும் வரை அவர்கள் என்னை விரும்புவார்கள். குறைந்தபட்சம் ‘இவன் ஏதோ திட்டத்துடன் இருக்கிறான்’ என்றாவது நினைப்பார்கள்” எனப் பதிலளித்தார்.