• July 24, 2025
  • NewsEditor
  • 0

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நகரத்தில் அமைதியான மரங்கள் சூழ்ந்த பூங்காவைக் கடந்து வண்டியில் சென்றபோது, காட்சிக் கீற்றுகளுடன் எதிரில் மரங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.  அந்த நுட்பமான தருணத்தில் தோன்றியது, மொழி நம்மோடு சென்று கொண்டிருக்கிறது, அனுபவங்களோ மரங்களைப் போல் நம்மைக் கடந்து பின்னால் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

கவிஞனின் அனுபவமும் மொழியின் புலமையும் அனுபவமாக மாறும்போது விசித்திரங்களைக் கண்டடைகிறது. மரங்கள் அசையவில்லை, மேகங்கள் நகரவில்லை, காற்று வீச வில்லையென்றால் மனம் அசையுமா என்பது கவனிக்கத்தக்கது. கவிதைகள் அகலப் பறந்தாலும் பெரும்பாலும் சொற்களை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆழ்ந்து வாசிக்கவோ யோசிக்கவோ வைப்பவை, ஏதோவொரு விளைவினை ஏற்படுத்த தவறுவதில்லை. ஆக, புகைமூட்டமாக எனக்குள் மிகுந்திருந்த அபிப்பிராயங்களுக்கு விடையாக, முன்னுதாரணமாக ஏ.கே.ராமானுஜன் கவிதைகளைச் சொல்லத் தோன்றுகிறது.

“ஒரு மொழியில் வேரூன்றி, வேறொரு மொழியில் கிளைகளாக விரியும் மரமென நான்!” என்று தன்னைப் பற்றிச்  சொல்லிக்கொண்ட கன்னட எழுத்தாளர், கவிஞர் அத்திபட் கிருஷ்ணசாமி ராமானுஜன், 1929 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர். அங்கேயே கல்லூரிப் படிப்பை முடித்தார்.  பெரும்பாலும் கன்னடம் பேசினாலும் வீட்டில் தமிழ் பேசும் சூழலும் இருந்துள்ளது. ஓரிடத்தில் நிலையாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவின் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க விரும்பினார். கேரளாவில் தொடங்கி, சென்னை சென்றார், பிறகு மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பெல்காம், பரோடா பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணி. 

ஏ.கே. ராமானுஜன் தனது கவிதைகளுக்காகப் பிரபலமானவர். முதலில் கன்னடம், ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். தமிழ் சங்கப் பாடல்கள் அவர் மொழிபெயர்ப்பில்தான் The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology ஆக உலகம் முழுவதும் பிரபலமானது.

The Elements of composition என்ற கவிதை மரபணுவின் தன்மைகளை ஆராய்கிறது. நானும் எல்லோரையும் போல் தந்தையின் விதையிலிருந்தும் தாயின் கருவிலிருந்தும் உருவாகியவன். உடலைப் பகுப்பாய்வு செய்வது போல் தனது நினைவகம், வரலாறு, கட்டுக்கதை ஆகியவற்றின் அடையாளம், இடம்பெயர்வு, நிலையற்ற தன்மை என விரிவாகச் சொல்கிறது.

புலம்பெயர்ந்து அமெரிக்கா சென்று, அங்கிருந்தபடி நினைவுகளைப் புரட்டி தனது சொந்த நாடு தொடர்பான ஏக்கங்களைப் படைப்புகளில் கொண்டு வந்தார்.   நம் சமுதாயம் என்பது ஒருமையானது அல்ல, அது பன்மைச் சமூகம்;   அது திரவமாகப் பரந்து விரிந்தது. நமது மரபணு,  தந்தையின் கோபத்திலும்  தாயின் கருவிலும் நுழைந்து வந்தாலும் மாமாவின் குறைகளும்  சகோதரியின் பயங்களும் ஒருபோதும் விட்டுவிலகிடாமல் நம் மனத்தில் வரைபடங்களைப்போல் பதிந்திருக்கின்றன.   

நைரோபிக் கலவரங்கள், மதுரையில் காணப்படும் தொழுநோயாளிகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட துறவிகள் அனைவரும் இவர் கவிதையில் வந்து செல்கிறார்கள்.     நாம் கடந்து வந்தவை,  நமது கலாசாரக் கட்டமைப்பு, உணர்வுகள்,  பின்புலங்கள் பிணைந்து மூத்தவர்களுக்கு இடையில்  ‘நான்’ என்பது  ஒரு நுண்ணிய உயிரினம் என்கிறார். தலைமுறை இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யும் இக்காலத்தில் ராமானுஜனின் கவிதை திகைப்பூட்ட வைக்கிறது.   புலம்பெயர்ந்த தனிநபரைப் பற்றிப் பேசினாலும், பல நேரங்களில் சொந்த மண்ணின் சுமைகளைச் சுமந்து செல்லும் புலம்பெயர் சமூகத்திற்கானது.

 “இலையிலிருக்கும் கம்பளிப்பூச்சி, சாப்பிடுகிறது,

சாப்பிடப்படுகிறது”

ஒரு கம்பளிப்பூச்சி சாப்பிடுகிறது, பிறகு அதுவே உண்ணப்படுகிறதென, மென்மையான உடலுடன் பேசுகிறது. இன்றைய பன்னாட்டுக் கலாச்சாரத்தில் ‘ஸ்மூதி’யாகும் வாழ்வியலைச் சுட்டும் ஓர் ஆழமான உருவகம். நமது சுயம் என்பது புனிதமானது, அது திடமானது என்பதால் அல்ல, மாறாக அது நிலையற்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு நல்லாசிரியராக மாணவர்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது, அவர் சொன்ன கதைகளைக் கேட்டு ரசித்தாலும் ஆங்கிலத்தில் எழுதுவது மாணவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதனால் சொல்லிக்கொடுக்கும் முறையை மாற்றவேண்டுமென்று பூனாவில் உள்ள டெக்கான் கல்லூரியில் இணைந்து மொழியியல் படித்தார்.  பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வுகள் குறித்த பேராசிரியராகப் பணியாற்றச் சென்றார். அங்குள்ள சூழலை மையப்படுத்திப் பாதியாகக் கடிக்கப்பட்ட வாழ்வியலைச் சுட்டும் Still Life என்னும் கவிதை. 

இன்னும் வாழ்க்கை

 மதிய உணவுக்குப் பிறகு

அவள் சென்றபின்

கொஞ்ச நேரம் படித்துக்கொண்டிருந்தேன்

திடீரெனச் சாப்பிட்டதை மீண்டும்

பார்க்கவேண்டுமெனத் தோன்றியது.

சாண்ட்விச்,

ரொட்டி,

முள்ளங்கியிலை,

சலாமி

அனைத்தும்

அவள் கடித்து வைத்த

வடிவத்திலேயே இருக்கின்றன

இரண்டு ரொட்டிகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்ட வாழ்வு, பாதிக் கடித்துவிட்டு அப்படியே சென்றதைப் போல் அரைகுறையாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஏ.கே.ராமானுஜன் என்ற பெயரைச் சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது A River என்ற  நீள்கவிதை.

 மதுரையில்

கோயில்களும் புலவர்களும் நிறைந்த  

நகரங்களையும் கோயில்களையும் பாடியிருக்கிறார்கள்

ஒவ்வொரு கோடைக்காலத்திலும்

ஒரு நதி வறண்டு போய் மணல் வரி வரியாக

விலா எலும்புகளைப்போல் காட்சியளிக்கிறது

 வைக்கோலும் பெண்களின் தலைமுடிகளும்

நீர் செல்லும் வாயில்களை அடைத்துக்கொண்டிருக்கின்றன

 துருப்பிடித்த கம்பிகள், பாலங்களுக்கு அடியில்

பழுதுபார்த்த கறைகள் திட்டுத் திட்டாகத் தெரிகின்றன

 நீருக்குள் மூழ்கியிருக்கும் ஈரமான கற்கள்

தூங்கிக்கொண்டிருக்கும் முதலையைப் போல் மின்னுகின்றன

 கரையிலிருக்கும் உலர்ந்த கற்கள்

மழிக்கப்பட்ட நீர்-எருமைகளைப் போல்

வெயிலில் காய்ந்துக்கொண்டிருக்கின்றன

 வெள்ளப்பெருக்கு வந்தால்

அதைப் பற்றி மட்டுமே புலவர்கள் பாடுகிறார்கள்

 ஒரு நாள் வெள்ளம் வந்த சமயத்தில்

அவன் அங்கிருந்தான்

நீர் எத்தனை அங்குலம் உயர்கிறது

என்பதைப் பற்றி மட்டுமே

எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

 துல்லியமாக எத்தனை படிக்கட்டுகள்

நீரில் மூழ்கிப்போயின என்பதையும்

நீராடும் படித்துறைகள் உயர்வதையும்

மூன்று கிராம வீடுகள் இழுத்துச்செல்லப்பட்டதையும்

ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும்

ஒரு ஜோடி பசு மாடுகள் கோபி, பிருந்தாவைப் பற்றியும்

வழக்கம்போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

 புதிய கவிஞர்கள் இன்னும் பழம்புலவர்களை

மேற்கோள் காட்டுகிறார்கள்

ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே

நீரில் மூழ்கி இறந்துபோன கர்ப்பிணி பற்றி

யாரும் பேசுவதில்லை.

வயிற்றுக்குள்ளிருக்கும் இரட்டைக் குழந்தைகள்

இறக்கும் முன் வெற்றுச் சுவர்களை

உதைத்திருக்கலாமென்பது பற்றி

யாருடைய பேச்சிலும் வரவில்லை.

 ஆண்டில் ஒரு முறைதான்

கவிதையாகப் பேசும் அளவிற்கு

ஆற்றில் நீர் வருகிறது

ஆனால் அரை மணி நேரத்திற்குள்

மூன்று கிராம வீடுகளையும்

கோபி, பிருந்தாவென்ற இரட்டைப் பசுக்களையும்

ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளை

எதிர்பார்த்திருந்த கர்ப்பிணிப் பெண்ணையும்

ஆற்று நீர் இழுத்துச்சென்றுவிட்டது

அவர்களுக்கு எந்த மச்சமும் இல்லையெனில்

வெவ்வேறு வண்ண டயப்பர்களைப் போட்டுத்தான்

அடையாளம் காணமுடியும்…

இக்கவிதை, பழமையான நகரங்களின் கலாச்சாரம், கவிஞர்கள் பாடும் அழகு, மனித வாழ்வின் துயரம் ஆகியவற்றை ஒப்பீட்டின் ஊடாகச் சித்தரிக்கிறது.  இயற்கையையும் பாரம்பரியத்தையும் புகழும் கவிஞர்களின் பழக்கத்தை விமர்சிக்கிறது. நகரம் குறித்த கவித்துவமான வர்ணனைகளுக்குப் பின்னால், வெள்ளத்தால் வீடுகளும் உயிர்களும் அழிகின்றன. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண் மரணத்தை யாரும் கவிதைக்குள் கொண்டுவராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, கவிதைகளும் சமுதாயமும் எளிய மக்களின் வேதனையை எப்படித் தவிர்க்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பதற்கு முன்பே தொலைந்து போன இரட்டையர்களை அடையாளங்காண “வெவ்வேறு வண்ண டயப்பர்கள்தான் தேவையெனக் கவிதை உச்சத்தை எட்டும் தருணத்தில் அதன் முரணும் இருண்ட நகைச்சுவையும் வலிக்கிறது. சாரமின்றி, ஆழமின்றி எழுதப்படும் கவிதைகள் செயற்கைத் தன்மையோடு ஒட்டிக்கொண்டுள்ளன என்பதாக எடுத்துக்கொள்கிறேன்.

நதி,  நகரம், நாகரிகம் பற்றியது மட்டுமல்ல கவிஞர்களும் எழுத்தாளர்களும் மேலோட்டமான அழகியலைத் தாண்டி காலப் பரப்பில் கவிதை நிகழும் கணம் திறந்து பார்க்கப்படாமல் கிடக்கிறது.   இருப்பைத் தேடி ஆழத்தை அறிவது கலையின் தார்மீகப் பொறுப்பு என்பதை வலியுறுத்துகிறது.

“Looking for a Cousin on a Swing” என்ற கவிதை சிறுமியின் நினைவுகளில் புதைந்துள்ள அனுபவங்களை வெளிக்கொணர்கிறது. அவள் நான்கு அல்லது ஐந்து வயதில் இருந்தபோது கிராமத்திலிருந்த ஊஞ்சலில் தனது ஒன்றுவிட்ட சகோதரருடன் விளையாடிய அனுபவம்.  அதே உணர்வுகளை மீண்டும் பெறுவதற்காக  நகரங்களில் சுற்றிக்கொண்டு, அதே மாதிரியான மரத்தையும் ஊஞ்சலையும் தேடவேண்டியிருக்கிறது.

நாங்கள் ஒரு மரத்தில் ஏறினோம்,

அவள் சொன்னாள்,

“அதிக உயரமாக இல்லை,

அத்தி மரத்தைப் போல

இலைகள் நிறைந்திருந்தன

நாங்கள் மிகவும் அப்பாவியாக இருந்தோம்”

 “Innocent about it” ஆக இருக்க முயன்று, நாமும் தொலைந்து, தொலைந்ததைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அன்றும், இன்றும் இதே நிலைதான் என்றாலும் ஒருகாலத்தில் தேடல் என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் சமீபகாலமாக அந்தச்சொல் அதிகம் பயன்பாட்டில் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஒருவேளை இணையத்தில் தேடித் தேடிக் களைத்துப்போன சமூகமாகிவிட்டோமோ…

ரொட்டிமீன் என்றொரு கவிதை, அவள் ரொட்டி மீன்களைச் சாப்பிட்டாள்; ஒரு மழுங்கிய தலை கொண்ட மீனை கூட என் வாயில் திணித்தாள்; நான் உட்காரவோ சாப்பிடவோ முடியாதபோது, ஒரு சுருள் நினைவுக்கு வந்தது. என் இதயமே என் வாய்க்கு அருகில் வந்தது என்பது நகைமுரணான கவிதை.  

Self-Portrait என்ற கவிதை சமகாலச்சூழலில், சுய-உருவப்படம் தனிப்பட்ட அடையாளத்திற்கும் மரபுரிமை எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தனிநபர் போராட்டங்களைச் சொல்கிறது.

எல்லோரையும் போல் தான்

நானும் இருக்கிறேன்

என்னைத் தவிர.

 சிலநேரங்களில்

கடை சன்னல்களில் பார்க்கிறேன்

இருந்தாலும் கண்ணாடிக் கடைகளில்

விதிகளை மீறி.

ஓர் அந்நியரின் உருவப்படம்,

தேதி தெரியவில்லை,

தோற்றமும் பெயரும் புரியாதவன்,

எப்போதும் ஒரு மூலையில்

என் அப்பாவின் கையெழுத்து!

எல்லோரையும் போல் தான் நானும் இருக்கிறேன் ஆனால் என்னைத்தவிர  என்று பிளவுகளால் முயங்குகிறது. மழுப்பலைப் படம்பிடித்து வரம்புகளைக் கடக்கும் எளிமையான கவிதை.

 ஒரு கவிதையின் மரணம் குறித்து’  என்ற  மீச்சிறு கவிதை மூன்று எளிய வரிகள் – மூன்று பத்திகளாகியிருக்கின்றன.  

On the Death of a Poem

 Images consult

one

another,

 a conscience-

stricken

jury,

 and come

slowly to

a sentence.

ஒரே ஒரு வரி, ஒரே ஒரு தீர்ப்பு, ஒரே ஒரு முடிவு;  இது தான் சில பல கவிதைகளின் நிலை. ஒரே வரியில் எழுதப்படும் தீர்ப்புகள் கவிதைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகின்றன.  ஒரு கவிதையின் மரணம், மௌனமான சொற்களுக்கான மரணத் தண்டனை. ஒரு கவிஞன் படைப்பாளியாக இருப்பதுடன், தனது சொந்தக் கருத்துகளுக்கும் நகைப்புகளுக்கும் தனக்குத்தானே நீதிபதியாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. உள் மனத்துடன் சண்டையிடுவதும் செயல்படுவதும், சொற்களுடன் போராடுவதும்  தங்களைத் தாங்களே கேள்விக்கு உள்ளாக்குகிறது.  எப்படித்தான் செயல்பட்டாலும் தெரிந்து பாதி, தெரியாமல் பாதியெனப் பல கவிதைகள் பல நேரங்களில் கைவிடப்படும் அனாதைகள்தான்.

ஏ.கே. ராமானுஜனின் கவிதை மரபு ஒரு நீடித்த தாக்கத்தைக் கன்னட மக்களிடையே ஏற்படுத்தினாலும் நவீன இந்திய ஆங்கிலக் கவிதையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.  அவரது படைப்புகள் கலாச்சார உணர்வுகள் அதன் நெருக்கம், ஒரு வகையான ஏக்க மனநிலையையும் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் இளமைக்கால நினைவுகள், குடும்பம், மொழி, புலம்பெயர்தல், இந்தியச் சடங்குகள், புராணக் கதைகள், மரபுகள் போன்ற கருப்பொருள்களை எளிதாகக் கையாண்டு ஒரு கவிதையைச் செயல்பட வைக்கும் உபகரணங்கள் அத்தனையும் ஊடுருவி செல்கின்றன.

 “The Striders,” “Relations,” மற்றும் “Second Sight” போன்ற கவிதைத் தொகுப்புகள் மூலம் பிரபலமானார். அவை இந்திய மண்ணின் உணர்வுகளுடன் மேற்கத்திய இலக்கிய நுட்பங்களைப் படைப்புகளாக்கி அன்றைய வாழ்வியலை, நுண்ணிய உணர்வுகளைப் பேசுபவை. அவருடைய சில கவிதைகள் கல்லூரிகளில் பாடங்களாக இருக்கின்றன. குறுந்தொகை மற்றும் கன்னட இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இந்திய இலக்கிய மரபுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

10-12 ஆம் நூற்றாண்டில் வசன  நடையில் எழுதப்பட்ட சைவ சிந்தனைக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Speaking of Siva என்ற  முக்கியத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.  The Temple and the Body  என்ற பசவண்ணாவின்  வரிகள் இவை.

செல்வந்தர்கள்

சிவனுக்காகக் கோவில்களைக் கட்டுவார்கள்

நானோ ஓர் ஏழை,

என்ன செய்வேன்?

எனது கால்கள் தூண்கள்,

உடல் தேவாலயம்,

தலை ஒரு பொன் மாடம்.

சங்கமிக்கும் நதிகளுக்கெல்லாம் தலைவனே, கேள்

நின்றுகொண்டிருப்பவை விழுந்துவிடும் 

ஆனால் நகர்ந்துகொண்டிருப்பவை  நிலைத்திருக்கும்.

 இந்தியக் கோயில்கள் மனித உடலின் வடிவத்தில் கட்டப்படும் பாரம்பரியத்தையும், அந்தக் கோயில்களை உருவாக்கும் சடங்குகளைப் பற்றியும், பசவண்ணா தனது வசனத்தில் எழுதியிருக்கிறார். கோயிலின் ஒவ்வொரு பகுதியும் மனித உடல் உறுப்புகளாகப் பெயரிடப்பட்டுள்ளன. இது கோயிலையும், உடலையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மதத்திற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு இன்றும் பொருந்தக்கூடியதாகத் தான் இருக்கிறது.

“Three Hundred Ramayanas” என்ற கட்டுரை,  ராமாயணக் கதைக்கு எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்பது பற்றிய சுவையான கட்டுரை. பெரும் கவனத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்திய கட்டுரையும் கூட.    இக்கட்டுரை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.   அதில் ராமரும் சீதையும் சகோதரர்கள் என்று சொல்லும் பாடங்களும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அந்தக் கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.  டெல்லி உயர் நீதிமன்றம் இக்கட்டுரையைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டுமென டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நான்கு பேர் கொண்ட குழு,  இந்தக் கட்டுரையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது. 

சிகாகோவின் வெப்பம் உறையும் ஒரு நாளில், அறையிலிருந்த நூல்கள் மட்டும் சாட்சியாகயிருக்க  அந்நிய மண்ணில் மரம் போல விழுந்தார். திடீர் பக்கவாதம் வர, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களே அவரது மரணத்திற்குக் காரணமாகின. அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் போது மயக்க மருந்து ஒவ்வாமையால் 1993 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது 64 வயதில்   மறைந்தார்.   அவரது வாழ்நாளின் கடைசிக் காலத்திலும் ஆரோக்கியமாக எழுதி வந்தவர். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவரது மறைவு இந்திய ஆங்கிலக் கவிதை, மொழிபெயர்ப்பு, நாட்டுப்புற இலக்கியம், ஒப்பீட்டு ஆய்வுகள் போன்ற துறைகளுக்குப் பேரிழப்பாக இருந்ததென்று சொல்லப்படுகிறது. அவர் காலமானாலும், அவரது எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன. அவை இந்திய மண்ணின் தனித்துவத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பாலமாகத் தொடர்ந்து விளங்குகின்றன. அவருக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதோடு   பத்மஸ்ரீ, மேக் ஆர்தர் விருதுகளையும் இந்திய அரசு வழங்கியிருக்கிறது.  அவரது வேர்களும் இங்கே, மொழியின் நுண்ணிய நழுவல்களுக்கிடையே நினைவுகளும் இங்கே.  மனம் பேசிய மொழியை விட மண் பேசும் கதைகளையும், வரலாற்றையும் சொன்ன அவரது கவிதைகளும் புனைவுகளும் எனக்குப் பெரும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன.   மொழியில் கிளைகளாக விரிந்து தனக்குள் கிளைத்த பெருமரமாகத் திகழ்கிறார் ஏ.கே. ராமானுஜன்.

-சொற்கள் மிதக்கும்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *