• July 24, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா, இங்கிலாந்துக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மூன்று ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் ஃப்ரீ ட்ரேட் ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இன்று (ஜூலை 24) கையெழுத்தாகியிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் – இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இங்கிலாந்து சந்தையில் 99 சதவிகிதம் வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், 2030-க்குள் இருநாடுகளும் தங்களின் வர்த்தக மதிப்பை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்துக்கு “விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement- CEPA) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து, கெய்ர் ஸ்டார்மருடன் ஒன்றாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மோடி, “இருநாடுகளுக்கிடையிலான உறவில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்த ஒப்பந்தம் குறிப்பாக, இந்திய இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்குப் பயனளிக்கும்.” என்று கூறினார்.

மோடி, கெய்ர் ஸ்டார்மர்
மோடி, கெய்ர் ஸ்டார்மர்

அதேபோல் கெய்ர் ஸ்டார்மர், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து பொருளாதார ரீதியாக இங்கிலாந்து செய்திருக்கும் மிகவும் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது.

இரு நாடுகளுக்கும் இது பயனளிக்கும்” என்று கூறினார். மேலும் எக்ஸ் தளத்தில், “இந்தியா – இங்கிலாந்து பொருளாதார உறவில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்று மோடியும், “இதுவொரு மைல்கல் ஒப்பந்தம்” என்று ட்வீட் செய்தனர்.

இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள்:

* இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை மிகவும் மலிவான விலையில் பெற முடியும்.

* இந்த ஒப்பந்தம் மூலம், சராசரி வரி 15 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகக் குறைந்தால் குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள், சாக்லேட்டுகள், பிஸ்கட், கார்கள் போன்ற இங்கிலாந்து தயாரிப்புகளை இந்தியர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

* மின்சார வாகனங்கள் குறிப்பிட்ட ஒதுக்கீட்டில் 110 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக வரி குறைப்பைக் காணும்.

* இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் மற்றும் இதர தயாரிப்புகள் மீதான இறக்குமதி வரி உடனடியாக 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவிகிதமாகவும் குறையும்.

* இந்த ஒப்பந்தத்தின் மூலம், இங்கிலாந்திலுள்ள இந்திய வல்லுநர்கள் அங்கு அலுவலகம் இல்லையென்றாலும் 35 துறைகளில் 2 ஆண்டுகளுக்கு பணியாற்ற முடியும். இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் 60,000-க்கும் மேற்பட்ட ஐ.டி நிபுணர்கள் பயனடையலாம். இதன் பயனாளிகளில் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

* இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்திய நிபுணர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

* சமையல்காரர்கள், யோகா ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற ஒப்பந்த தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த ஒப்பந்தம், இங்கிலாந்து வேலை சந்தையில் நுழைய உதவுகிறது.

இங்கிலாந்துக்கு கிடைக்கும் பயன்கள்:

* இந்தியாவில் பொது கொள்முதல் வாய்ப்புகளை இங்கிலாந்து வணிகங்கள் விரிவுபடுத்தும்.

* 2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள non-sensitive அரசு டெண்டர்களை பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஏலம் எடுக்க முடியும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 40,000 டெண்டர்களில் இங்கிலாந்து நிறுவனங்கள் பங்கேற்க முடியும். இதன் மதிப்பு மொத்தமாக ரூ. 4.09 லட்சம் கோடி.

மோடி, கெய்ர் ஸ்டார்மர்
மோடி, கெய்ர் ஸ்டார்மர்

* இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேரடியாக 2,200-க்கும் மேலான வேலைவாய்ப்புகளை இங்கிலாந்து உருவாக்க முடியும்.

* இங்கிலாந்து தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2.2 பில்லியன் பவுண்டுகள் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

* உடைகள், காலணிகள், உணவுப் பொருள்கள் ஆகியவை இங்கிலாந்து மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *