• July 24, 2025
  • NewsEditor
  • 0

திருமணத்தை மீறிய உறவால், தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கும், அவரது காதலர் மீனாட்சி சுந்தரத்திற்கும் ‘சாகும் வரை ஆயுள் தண்டனை’ என அதிரடி தீர்ப்பை அளித்திருக்கிறது காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம்.

குன்றத்தூர் அபிராமி… அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்கமுடியாத பெயர். 2018-ஆம் ஆண்டு, இதயத்தில் ஈரமே இல்லாமல், தான் பெற்ற குழந்தைகளை எதற்காக அவர் படுகொலை செய்துவிட்டு, காதலருடன் தப்பிக்க முயற்சித்தாரோ… இனி, சாகும்வரை ஒன்று சேரவே முடியாது என்கிற அளவுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறது, நீதிமன்றம். அபிராமிக்கும் கொலைக்கு உடந்தையாய் இருந்த காதலர் மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும்வரை சிறையிலேயே இருக்கவேண்டும் என்ற தீர்ப்பை வழங்க, இருவரும் கதறி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு தாமதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யிடம் பேசினேன்,

“இரண்டு வருட கொரோனா சூழலால்தான் தீர்ப்பு தாமதமாக வந்திருக்கிறது. ஆனால், சரியான நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இப்படியொரு தீர்ப்புக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன்.

விஜய்

என் குழந்தைங்களை கொன்னு, அவங்களோட சந்தோஷத்தையும் என் கனவையும் வாழ்க்கையையும் செதைச்ச அபிராமிக்கு சாகும்வரைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதனால, தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பைக் கொடுக்காம, குறைஞ்ச தண்டனை வழங்கியிருந்தா நிச்சயம் நான் கஷ்டப்பட்டிருப்பேன். குழந்தைங்களை இழந்து ஒவ்வொரு நாளும் துடிக்கிற வலியும் வேதனையும் எனக்கு மட்டும்தான் தெரியும்.

எங்க வீட்டுக்கு நான் ஒரே பையன். எனக்கடுத்து, என் குழந்தைங்கதான் எங்கப்பாம்மாவுக்கு உலகமா இருந்தாங்க. பேரக்குழந்தைங்களை இழந்து அவங்களும் அழுவாத நாளே கிடையாது. நண்பர்கள், உறவினர்கள் எங்களுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா தேற்றி கொண்டு வந்துக்கிட்டிருந்தாலும் இழப்போட வலி இன்னும் அப்படியேத்தான் இருக்கு.

நான் வேலை பார்த்துக்கிட்டிருந்த, அதே வங்கியில்தான் இப்பவும் ஃப்ரீலான்சரா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். என்னதான் வேலைல கவனம் செலுத்தினாலும் வீட்டுக்கு வந்ததும் குழந்தைங்க இல்லாத வெறுமை வாட்டியெடுக்குது. இப்பவும், குழந்தைங்களோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்றவர்களுக்கு சாப்பாடு போடுறேன். வெள்ளிக்கிழமை அன்னைக்கு குழந்தைங்க இறந்தாங்க. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாப்பாடு எடுத்துக்காம விரதம் இருந்துட்டு வர்றேன்.

நான் கஷ்டப்பட்டு உழைச்சதே அபிராமிக்கும் என் குழந்தைங்களுக்காகவும்தான். எவ்ளோ பாசம் வெச்சிருந்தேன்னு அக்கம் பக்கத்திலிருக்க எல்லோருக்கும் தெரியும். அதை நானே சொல்லக்கூடாது. ஆனா, எதையும் நினைச்சுப் பார்க்காம ஒரு செகெண்ட்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டாங்க.

குன்றத்தூர் அபிராமி

‘அப்பா… அப்பா..’ன்னு குழந்தைங்க ஆசையா என்மேல வந்து விழுந்து கொஞ்சி விளையாடுவாங்க. கட்டிப்பிடிச்சு தூங்குவாங்க. அவங்களோட சிரிப்புச் சத்தத்தை இந்த உலகத்துல இல்லாம ஆக்கின அபிராமியை என் இதயத்திலிருந்து எப்பவோ தூக்கி எறிஞ்சுட்டேன். ஆனா, அவங்க பண்ணின கொடூரத்தையும் துரோகத்தையும் என்னைக்குமே மன்னிக்கவே மாட்டேன். இனி மன்னிப்பே கிடையது!

நண்பர்கள் சிலர், எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு திருமணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழுன்னெல்லாம் சொன்னாங்க. என் குழந்தைங்களை இழந்துட்டு எப்படி நிம்மதியா வாழமுடியும். மறுமணம் பற்றியெல்லாம் என்னால யோசிக்க முடியல; முடியாது. இப்போ, இந்த தீர்ப்பு வந்ததால குழந்தைங்கப் பற்றின சிந்தனை அதிகமாகிருக்குன்னுதான் சொல்லணும். இதுலருந்து மீளவே இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும்” என்று மீளாத்துயரத்துடன் பேசுபவரிடம் “அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும்வரைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு தண்டனையை இன்னும் கடுமையாக்கியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்திடுகிறார்களே நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என்றோம்.

ரஜினியுடன் விஜய்

” மீனாட்சி சுந்தரம் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பல. சமூக வலைதளங்களில் அபிராமி கையில் நெயில் பாலிஷ் எல்லாம் போட்டுட்டு வந்ததா போட்டிருக்காங்க. தவறை உணர்ந்தவங்க நீதிமன்றத்துக்கு இப்படி மேக்கப்பெல்லாம் பண்ணிட்டு வரமாட்டாங்க. தவறை உணர்ந்தாங்களா இல்லையான்னு அவங்க மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும். தூக்குதண்டனைங்கிறது ஒரு நிமிட வலி. ஆனா, ‘வாழ்க்கை முழுவதும் தண்டனையை அனுபவிச்சு செய்த தவறை உணர்ந்து வருந்தணும்’னு நீதிபதிங்க சொல்லிருக்காங்க. கடைசியா, நானும் அதையே என் கருத்தா சொல்றேன். அபிராமி செய்த தவறை உணர்ந்து திருந்தணும்!” என்கிறார் அழுத்தமாக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *